டெல்லி: தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரை செல்வோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என பெரியகுளம் காங்கிரஸ் எம்.பி.யும், தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தலைவருமான ஜே.எம். ஹாரூண் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து லோக்சபாவில் அவர் பேசுகையில், ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கான இட ஒதுக்கீடு குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்காக 10 ஆயிரத்து 508 விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் மொத்தம் 3 ஆயிரத்து 181 பேருக்கு மட்டுமே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே தவறான கணக்குப்படி தமிழ்நாட்டிற்கு ஹஜ் இட ஒதுக்கீடு செய்யப்படுவது நியாயமற்றது. இது முஸ்லிம்களுக்கு அதிருப்பதியை ஏற்படுத்துகிறது. மக்கள் தொகை அடிப்படையில் ஹஜ் பயண ஒதுக்கீடு அளிப்பது சரியானது அல்ல.
அதற்கு பதிலாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஹஜ் விண்ணப் பங்களின் அடிப்படையில் பயண ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். முந்தைய ஆண்டு விண்ணப்பித்தும் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அதற்கு அடுத்த ஆண்டில் இடம் கிடைக்க செய்யும் முறை பின்பற்றப்பட வேண்டும் என்றார் அவர்.