இந்துத் தீவிரவாதம் என்று சொல்லாதீர்கள்” – பாஜக வின் கண்டனம் சரியேமகாராஷ்டிராவில் 2006 செப்டம்பரில் மாலேகாவ் என்கிற ஊரின் மசூதி ஒன்றின் வெளியே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 35 பேர் உயிர் இழந்து நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தேசத்தின் எத்தனையோ குண்டுவெடிப்பு சம்பவம் போல் அதுவும் கிட்டத்தட்ட மறக்கப்பட்டிருக்கும்.
அப்போது இதன் பின்னணியில் பாகிஸ்தானும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு SIMI-யும் இருப்பதாகச் சொல்லப்பட்டு, இஸ்லாமியத் தலைவர்கள் பலரும், “இந்திய இஸ்லாமியர்களுக்கிடையே குழப்பம் விளைவிக்கும் இது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிட வேண்டும்” என்கிற ரீதியில் கண்டனம் தெரிவித்து ஒற்றுமையை வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டதெல்லாம் எனக்கு நினைவிருக்கிறது.
அப்போது அமைக்கப்பட்ட விசாரணைக்குழு (ATS) தன் விசாரணையைத் தொடர்ந்து, இப்போது அந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் சாத்வி ப்ரக்யா சிங் டாக்குர் என்கிற ஒரு சாதுவின் பங்கினைக் கண்டறிந்திருக்கிறது. அவரும் அவருடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சாத்வி என்கிற சொல் சாது என்பதன் பெண்பால் வடிவம். அவர் இந்து ஜன் ஜாக்ரன் மஞ்ச் என்கிற இந்துத்வா அமைப்பின் மகளிர் பிரிவின் முக்கியஸ்தர்; ABVP எனப்படும் மாணவர் அமைப்பு, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளுடன் தொடர்பு உள்ளவர் என்கிற செய்திகள் வெளிவருகின்றன. அந்த அமைப்பினர் உடனடியாக அவற்றை மறுத்துள்ளனர். இந்துத்வா அமைப்புகளில் பொதுவாக உறுப்பினர் பதிவுகள் இருப்பதில்லை. வாலண்ட்டரி என்கிற பெயரில் எவரையும் எப்போதும் கழற்றிவிடத் தோதுவாகச் செயல்படும் அமைப்பினர் அவர்கள் என்பது விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும்.
“கூட்டத்தில் கோழி திருடியவன் தலையில் இறகு இருக்கும்” என்று கேட்ட மாத்திரத்தில் தலையைத் தடவிப் பார்க்கும் “உத்தமன்” போல் பாராளுமன்றத்தில் பாஜக தம் குரலை உயர்த்த ஆரம்பித்திருக்கிறது. “இந்துத் தீவிர வாதிகள்” (HINDU TERRORIST) என்கிற வார்த்தையே உபயோகப்படுத்தப்படக் கூடாது என்பது அவர்களின் வாதம்.
அவர்கள் சொல்வது முழுவதும் சரி. தீவிரவாதிகள் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மனநோயாளிகள்; பாதி மிருகங்கள். சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள். “இந்துத்வா தீவிரவாதம்” என்கிற வார்த்தை தான் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
அமைப்பு பூர்வமான இயக்கத்தினர் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுடைய பணவரவு, அவர்தம் நடவடிக்கைகள் எல்லாமே தீவிரமாகச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு சந்தேகம் இம்மியளவு இருந்தாலும் அவை உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். களையுனர் கைகொல்லும் காழ்த்த இடத்து முள்மரமாக வளர்ந்து விட்டால், அவர்கள் சமூகத்தை எப்படி அழிப்பார்கள் என்பதற்கு இன்னுமோர் எச்சரிக்கை இந்த நிகழ்ச்சி. "தண்டிக்கப்படாத கிரிமினல் குற்றங்கள் மேலும் கிரிமினல்களை உருவாக்கும்" என்கிற குஷ்வந்த் சிங்கின் வாதத்திற்கு இன்னோர் உதாரணம். 1992-ல் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சரிவர தண்டிக்கப்பட்டிருந்தால் அதன் பிறகான பல தேசிய இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் இது போன்ற விஷயங்களைப் பூதாகரமாக்கி நாட்டினர் உணர்வுகளை இந்துப் பெரும்பான்மை என்கிற போர்வையில் பிளவு படுத்தும் சதியையும் இந்த மாபாவிகள் செய்வார்கள். பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.
நன்றி : முயல்
இந்துத் தீவிரவாதம் என்று சொல்லாதீர்கள்” – பாஜக வின் கண்டனம் சரியே
Labels:
Hinduism,
சங்பரிவார்