வேலையில் சேருவதற்காக தலா ரூ.1 லட்சம் பணத்தை ஏஜென்டிடம் கொடுத்து ஏமாந்து சவூதியில் பரிதவித்து வருகின்றனர் நான்கு கேரளத் தொழிலாளர்கள்.
ரியாத் நகரில் உள்ள அறக்கட்டளை ஒன்றிடம் அவர்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர். இலியாஸ் புதுக்குடிப்பரம்பு, மனோஜ் குமார், ரதீஷ் குமார், முகம்மது ரபீக் ஆகிய நால்வரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
மும்பையைச் சேர்ந்த டா எக்ஸ்போ என்ற வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் இவர்கள் சவூதிக்கு வந்தனர். வேலையில் சேருவதற்காக தலா ரூ. 1 லட்சம் பணத்தை அந்த நிறுவனத்தின் ஏஜென்டிடம் வழங்கியுள்ளனர்.
சவூதி வந்த பின்னர்தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு கொடுக்கப்படுவதாக கூறப்பட்ட வேலைக்கு மாறாக வேறு வேலையில் நாங்கள் அமர்த்தப்பட்டோம். தங்க இடம் தரப்படவில்லை. மாறாக, வேலை பார்த்த இடத்தின் மொட்டை மாடியில் தங்குமாறு வற்புறுத்தப்பட்டோம். சம்பளமும் தரவில்லை.
எங்களது ஸ்பான்சர் குறித்து நாங்கள் இந்தியத் தூதரகத்தில் புகார் கொடுத்தபோது ஆத்திரமடைந்த அவர் எங்களை வெளியே துரத்தி விட்டு விட்டார் என்றனர்.
கோழிக்கோட்டில் உள்ள கோல்டன் விங்ஸ் டிராவல் ஏஜென்சி மூலமாகவே இந்த நான்கு பேரும் சவூதிக்கு வந்துள்ளனர். இவர்களது நிலை குறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ஜெயபால் என்பவர்தான் இந்த நான்கு பேருக்கும் பொறுப்பானவர்.
ஜெயபால் சவூதியில் உள்ள இந்த நான்கு பேரின் ஸ்பான்சரையும் சமாதானப்படுத்தி உரியவற்றை செய்யுமாறு முயற்சித்து வருகிறார்.
நான்கு பேருக்கும் தங்கும் வசதி, சூப்பர் மார்க்கெட் அல்லது மருத்துவமனைகளில் வேலை ஆகியவற்றைப் பெற்றுத் தர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரச்சனையை தீர்க்க டா எக்ஸ்போ நிறுவனத்தின் உதவியையும் நாங்கள் நாடியுள்ளோம் என்றார்.
நன்றி - தட்ஸ் தமிழ் . காம்