இந்துத்துவா பயங்கரவாத அமைப்பை உருவாக்க ராணுவ நிதியைப்பயன்படுத்திய புரோஹித்! மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பி.எஸ். புரோஹித் ராணுவப் புலனாய்வுத் துறை நிதியைப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ளார் என்று அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் சிவ்ஜி உபத்யாய, சமீர் குல்கர்னி, அஜய் ஏக்நாத் ரஹிர்கர், ராகேஷ் தத்தாத்ரேயா தவ்டே, ஜகதீஷ் சிந்தாமன் மாட்ரே ஆகிய 5 பேரின் காவல் துறை காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இவர்கள் அனைவரும் நவம்பர் 17 வரையிலான நீதிமன்றக் காவலிற்குத் திங்கட்கிழமை அனுப்பப்பட்டனர்.காவல் துறை விசாரணையில் உள்ள லெப்டினன்ட் கர்னல் பி.எஸ். புரோஹித் நவம்பர் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார். அவர் உள்பட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.மாலேகான் சதியில் புரோஹித் முக்கியக் குற்றவாளியாக இருக்கலாம் என்றும், ராணுவப் புலனாய்வுத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் அவரிடம் விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அபினவ் பாரத் என்ற சிறிய இந்துத்துவா அமைப்பை உருவாக்க ராணுவ நிதியைப் புரோஹித் பயன்படுத்தியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.மேலும், 2005- 06 ஆம் ஆண்டில் புனேவில் ராணுவப் புலனாய்வுத் துறையில் பணியமர்த்தப்பட்டபோது இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுடனான தொடர்பை புரோஹித் வளர்த்துக் கொண்டு உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ( அதிரை ஆன்லைன் )