ஐபியால் உருவாக்கப் படும் போலித் தீவிரவாதிகள்!

கேரளா-கஷ்மீர், ஐபி மற்றும் புலிவால்!

.பி!

* நம் நாட்டின் எல்லைப்புறப் பாதுகாப்புக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா?

* புதிதாகப் பதவியேற்கும் அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பின்னணியில் ஐயத்திற்கிடமாக ஏதும் இருக்கிறதா?

* முக்கிய அரசியல் தலைவர்களது பாதுகாப்புக்கு பங்கம் விளையக் கூடிய சாத்தியம் நிலவுகிறதா?

* உள்நாட்டில் தீவிரவாதம்/குழப்பம் உருவாகக் கூடிய சாத்தியமுள்ள இடங்கள், சூழ்நிலைகள் யாவை?

ஆகியவை குறித்துத் தகவல்கள் சேகரிப்பது ஐபி என்று சுருக்கி அழைக்கப் படும் இண்டெலிஜென்ஸ் ப்யூரோ (Intelligence Bureau) ஏஜென்ஸியின் வெளிப்படையான நடவடிக்கைகளாகும்.

ஆனால், இந்திய உளவுத்துறைக்குத் தகவல் சேகரித்து அனுப்பும் நிறுவனமான இந்த இரண்டெழுத்து நினைத்தால் தனியொரு மனிதனுடைய வாழ்க்கையைத் தடம் புரள வைக்கலாம்; வளர்ந்து வரும் ஓர் அமைப்பு/கட்சியை இரண்டாக உடைக்கலாம்; மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் ஆட்சியைக் கலைத்து விடலாம்; இல்லாத ஒரு கருத்துருவாக்கத்தைச் செய்து, அதுதான் இயல்பான உண்மை என்பதுபோல் மக்கள் மத்தியில் உலா விடலாம். இவற்றுள் எதையும் யாரும் கேள்வி கேட்க முடியாது; ஏனெனில் இவற்றையெல்லாம் செய்வது யார் என்று வெளிப்படையாகத் தெரிந்து கொள்வது அத்துணை எளிதன்று.

இன்றைக்கு விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில் அடக்கி வாசிக்கும் முதல்வர் கருணாநிதியின் தி.மு.க. அரசு 1990இல் கலைக்கப் பட்டதன் பின்னணியில் இருந்தது ஐபிதான். அனைத்து அரசு இயந்திரங்களையும் கையில் வைத்துக் கொண்டு அன்றைக்கு(ம்) இயக்கிக் கொண்டு முதல்வர் பதவியிலிருந்த கருணாநிதிக்கே அப்போது இந்த உண்மை தெரியாது!

அரசியல் கட்சிகள், அதீத வளர்ச்சியைப் பெறும் சமுதாய அமைப்புகள் அடிக்கடி உடைகின்ற செய்தியைப் படிக்கும்போது, தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்றுதான் சாதாரண மக்கள் நினைப்பார்கள். ஆனால், அத்தனை கருத்து வேறுபாடுகளையும் உருவாக்கும் கைங்கரியத்தை ஐபி செய்யும் இரகசியம் வெளியே யாருக்கும் தெரியாது. உயர் மட்டத் தலைவர்கள் காதில் ஊதப் படும் செய்திகளை உருவாக்குவது மட்டுமின்றி, 'ஆசிரியருக்குக் கடிதம்' எழுதுவதுவரை அத்தனை சேவை(!)களையும் செய்பவர்கள் ஐபியின் ஐப்பீஎஸ் ஆஃபிஸர்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஐபி உருவாக்குவது போலிக் கருத்துருவாக்கங்கள் மட்டுமல்ல; போலித் தீவிரவாதிகளையும்தான் என்பதே சான்றுகளால் நிறுவப் பட்ட இத்தலையங்கத்தின் கரு. அது, இறுதியில் சொல்லப் பட்டுள்ளது. ஐபி என்ற புலிவாலைப் பிடித்தவர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் கொஞ்சம் கேரளாவும் காஷ்மீரும் ...

***

"கஷ்மீரில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் மலையாளிகளும் அடக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு அரசும் காவல்துறையும் கேரளத்தில் நடத்திக் கொண்டிருக்கும் காட்டு தர்பார், முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதியாகும்" எனப் பிரபல கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தேஜஸ் மலையாள நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். "இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுக்கப் பட்டவர்களாக காண்பிக்க வேண்டும் என்பதே அவர்களது இலட்சியம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நெருங்கி வரும் பாராளுமன்றத் தேர்தலில் இலாபம் அடைய இந்த என்கவுண்டரைப் பயன் படுத்திக் கொள்வதற்கு இடதுசாரிகளும் சங் பரிவாரமும் முயல்கின்றன. கஷ்மீரில் தீவிரவாதச் செயல்பாடுகளுக்காகச் சென்றவர்களுள் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வதற்குக் கூச்சப் படாத கொச்சியிலுள்ள கிரிமினல் குண்டர் குழுவில் இருந்த சிலரும் அடக்கம் என்பதே தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவல்களாகும். இதிலிருந்து தெளிவான திட்டத்துடன் பணம் கொடுத்து, ஏதோ ஓர் ஏஜன்ஸி குற்றப்பின்னணியுடைய மலையாளி இளைஞர்களைத் தீவிரவாதச் செயல்பாடுகளுக்காக உருவாக்குகின்றது என்பது தெளிவாகின்றது.

இந்த ஏஜன்ஸி, அரசின் ஐபியோ சங் பரிவார தனி அமைப்புகளோ காஷ்மீர் அமைப்புகளோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதுமுள்ள நல்லெண்ணத்தைத் தகர்த்தால் அதன் பலனை அடைந்து கொள்வது ஆர்.எஸ்.எஸ்ஸாகும். முஸ்லிம்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்குவதே இவர்களின் இலட்சியமாகும். இக்காரணத்தினாலேயே இச்சம்பவங்களின் பின்னணியில் செயல்படுபவர்களாக நான் அவர்களைச் சந்தேகிக்கிறேன்.

இந்தியாவில் ஐபியே நேரடியாகக் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது விசாரணைகளில் தெளிவாகியுள்ளது. ஜாமிஆ சம்பவத்தில் காவல்துறையின் பொய்முகம் தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே?.

'ஃபாயிஸின் தாய் தேச விரோதியான மகனின் உடலைக்கூடப் பார்க்க மறுத்ததைப் பலரும் பெரிய தேசப்பற்றாக உயர்த்திக் காட்டுகின்றனர். பிறந்த ஊரில் இன்னும் கொஞ்ச காலம் வாழ வேண்டிய கட்டாயத்திலுள்ள எளிய தாயொருத்தி, நிர்பந்திக்கப் பட்டச் சூழலில் கூறிய வாசகங்களாகும் அவை. கஷ்டப்பட்டுப் பெற்ற எந்த ஒரு தாயும் தன் மகனைப் பற்றி மனப்பூர்வமாக இவ்விதம் கூறமாட்டாள்.

நேற்று வரை கிறிஸ்தவனாகவும் ரவுடியாகவும் வாழ்க்கை நடத்திய வர்கீஸ், திடீரென யாசிராக மாறி கஷ்மீரில் கொல்லப்பட்ட உடன், அதன் முழுப் பொறுப்பையும் இஸ்லாம் ஏற்றெடுக்க வேண்டும் எனக் கூறுவது சரியல்ல. கொச்சியில் தம்மனம் ஷாஜி உட்பட எல்லா குண்டர்களும் கஷ்மீரில் என்றல்ல, எங்கு போய்க் கொல்லப்பட்டாலும் மக்களிடையே எவ்வித எதிர்ப்புகளும் உருவாகப் போவதில்லை.

கிரிமினல்களை மதம் மாற்றி, தீவிரவாதச் செயல்பாடுகளில் பங்கு கொள்ள வைத்து, ஒரு மதத்துக்குக் களங்கம் உண்டாக்குவதற்கானக் கூட்டுசதி வரை நடக்கலாம் என நான் சந்தேகப் படுகிறேன். காவல்துறையும் ஊடகங்களும் கூறுவது எதையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. காவல்துறையும் ஊடகங்களும், "மஅதனி சிறையிலிருந்து வெளியானால் நாட்டில் கலவரம் உருவாகும்" என அச்சுறுத்தி வந்தனர். பின்னர் அது என்ன ஆனது?" என்று பாலசந்திரன் கேள்வி எழுப்பினார்.

***

"கஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட கேரள முஸ்லிம்களை, காஷ்மீருக்குக் கடத்திக் கொண்டு போய்ச் சேர்த்ததன் பின்னணியில் ஐபி செயல்பட்டுள்ளது" என்றும் "இது நாட்டில் முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்கான திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி" என்றும் இந்திய தேசிய லீக்கின் அகில இந்தியத் தலைவர் பேரா. முஹம்மது சுலைமான் குற்றம் சாட்டியுள்ளார்.

"சிறிய கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்திச் சிறை வைப்பதும் சுட்டுக் கொல்வதும் தொடர்கிறது. போலித் தீவிரவாதிகள் உருவாக்கப் படுகின்றனர். பின்னர், தாக்குதலில் 'முஸ்லிம் தீவிரவாதி'கள் கொல்லப்பட்டதாகச் செய்தி வருகிறது. முஸ்லிம் தீவிரவாதத்திற்கு எதிரான தங்களின் பிரச்சாரங்கள் சரியானவைதாம் என்ற கருத்துருவாக்கத்தை மக்களிடையே திணிப்பதற்காகக் காவல்துறையும் இராணுவமும் இணைந்து என்கவுண்டர் நாடகங்களை நடத்தி வருகின்றனர். நாட்டில் மதசார்பின்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய உளவுத்துறைகூட, மக்களிடையே அச்சத்தையும் மனக் கலவரத்தையும் விதைத்து, நாட்டின் அமைதியைக் குலைக்க முயல்கின்றது. காஷ்மீருக்குக் கேரளத்திலிருந்து இளைஞர்களைக் கடத்தி, அங்கு வைத்து அவர்களைச் சுட்டுக் கொன்றதன் பின்னணியில் ஐபிதான் செயல்பட்டுள்ளது" எனக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கக் கேரளத்திற்கு வந்த பேரா. முஹம்மது சுலைமான் செய்தியாளர்களிடம் கூறினார்.

***

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மக்களுடைய ஆதரவைத் திரட்ட, காவல்துறையும் ஹிந்துத்துவ சக்திகளும் இணைந்து போலித் தீவிரவாதிகளை உருவாக்குகின்றன என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கதை-வசனம், தயாரிப்பு, டைரக்ஷன் என்பது நாடகம்/திரைப்படங்களுக்கு மட்டும் சொந்தமானவையல்ல; அவை ஐபிக்கும் சொந்தமானவைதாம் என்பது வெள்ளிடை மலையாகி விட்டது.

டெல்லி காவல்துறையின் ஸ்பெஷல் செல் மற்றும் மத்திய உளவுத்துறையின் இன்டலிஜன்ஸ் பியூரோ (ஐபி) என்றழைக்கப் படும் நுண்பிரிவு ஆகியவற்றால், "இன்ஃபார்மர்" என்று செல்லப் பெயரால் அழைக்கப் படும் உளவாளியாக நீண்ட காலம் புலிவாலைப் பிடித்த கதையாகச் செயல்பட்ட இர்ஷாத் அலி என்பவர் திகார் சிறையிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியக் கடிதத்தில் இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கக்கூடிய பல தகவல்கள் அடங்கியுள்ளன.

காஷ்மீரில் இயங்கும் லஷ்கரே தொய்பாவில் சேர்ந்து கொள்வதற்கும் பாகிஸ்தான் எல்லையில் அதற்கான பயிற்சி மையத்தில் இணைவதற்கும் கட்டாயப் படுத்திய ஐபியின் கட்டளைகளுக்கு இணங்காததால் இர்ஷாத் அலி என்பவரும் அவரின் நண்பர் நவாப் கமர் என்பவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஐபிக்கு உதவா விட்டால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் நீண்ட நாள்களாக ஐபியின் உளவாளிகளாகச் செயல்பட்ட அவ்விருவரும் சிறையில் தள்ளப் பட்டதற்கான காரணம், ஐபியின் சதிக்குத் தற்போது அவ்விருவரும் இணங்க மறுத்ததுதான் என அவர்களின் வழக்கறிஞரான சுஃப்யான் சித்தீக் கூறுகிறார்.

இர்ஷாதுக்கு ஐபியால் அன்பளிப்பு(!)ச் செய்யப் பட்ட 9873303646 என்ற மொபைலுக்கு ஐபியின் அலுவலகத் தொலைபேசியில் இருந்து 56 முறை ஓர் ஐபி அதிகாரி தொலைபேசியுள்ளதன் மூலம் இர்ஷாத் அலியும் கமரும் ஐபியின் இன்ஃபார்மர்களாகச் செயல் பட்டவர்கள்தாம் என்பதையும் சிபிஐ உறுதி செய்துள்ளது.

இரு இன்ஃபர்மர்களோடும் தொடர்பிலிருந்த ஐபி ஆஃபிஸர்கள்:
பெயர்
மொபைல்
சஞ்சீவ் யாதவ் 9810058002
லலித் மோகன் 9811980604
ஹர்தேவ் பூஷான் 9811980601
மாஜித் () காலித் 9810702004
அஃப்தாப் 9810702004
தங்கள் மீது பொய் வழக்குப் போட்டுத் திகார் சிறையில் அடைத்துள்ளதாகவும் இதுவரை எவ்வித விசாரணையும் இன்றித் தங்களை அடைத்து வைத்துள்ளதாகவும் இதனை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் பிரதமருக்கு இர்ஷாத் கடிதம் எழுதியுள்ளார். உயர்நீதி மன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சி.பி.ஐ இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில், ஐபி அதிகாரி முஹம்மது காலித், டெல்லி ஸ்பெஷல் செல்லிலுள்ள லலித், பூஷண் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து இர்ஷாதையும் நவாப் கமரையும் கடத்திச் சென்றனர் என்பதைச் சான்றுகளுடன் ஸி.பி.ஐ வெளிக் கொண்டு வந்துள்ளது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் 'தீவிரவாதத் தாக்குதல்'களில் முஸ்லிம் 'தீவிரவாதிகள்' கொல்லப்படுவது எப்படி? என்பதைப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இர்ஷாத் அலி தெளிவு படுத்தியுள்ளார். காவல்துறையின் முக்பிர்(உளவாளி)ஆகச் செயல்பட்ட தனது சொந்த அனுபவத்தை, திகார் சிறையின் 8ஆம் எண் வார்டிலிருந்து விவரிக்கும் இர்ஷாதின் கடித வரிகள்:


"இஸ்லாமிய மார்க்க விஷயங்களில் ஓரளவு அறிவுள்ள, தாடியும் தலைப்பாகையும் அணிந்த ஓர் உளவாளி முல்லாவை முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் குடியமர்த்துவதே ஐபியின் முதல் நடவடிக்கையாகும். பெரும்பாலும் பள்ளிவாசலின் அண்மையில் உள்ள வாடகைக் கட்டிடங்களிலோ பள்ளிவாசலிலேயோ உளவாளியின் வசிப்பிடம் அமையும். உறுதியான இஸ்லாமிய அடிப்படைகளைப் பேணுவதும் வசீகரிக்கும் படியான அவரது பழக்கவழக்கங்களும் நாட்கள் செல்லச் செல்ல இளைஞர்களை இவரோடு நெருங்க வைக்கும். அவர்களுள் உறுதியானவரும் மிகுந்த நம்பிக்கையாளருமான இளைஞர்களையே முல்லா குறி வைப்பார்.

தம்மிடம் நெருங்கிப் பழகும் இளைஞர்களிடம், "இந்திய முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலைமைக்கு ஜிஹாத் மட்டுமே ஒரே தீர்வு" என்று கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு வெறியூட்டுவார். தன்னோடு தொடர்ந்த தொடர்பிலிருப்பவர்களுள் நம்பிக்கையானர்வகளிடம், தான் ஒரு லஷ்கரே தொய்பா கமாண்டர் என்று மெதுவாக உளவாளி முல்லா அறிமுகம் செய்து கொள்வார்.

ஐபி சொல்லிக் கொடுத்தபடி அவர்களுக்குச் சிறிய அளவிலான ஆயுதப் பயிற்சியும் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான வழிமுறைகளையும் அவர் கற்றுக் கொடுப்பார். அதற்குத் தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்களையும் உபகரணங்களையும் ஐபியே ஏற்பாடு செய்யும். அதன் பின்னர், யாராவது ஒருவரை அல்லது கோயில் போன்ற பொது இடத்தை இலக்காக்கித் தாக்குவதற்கான திட்டத்தை ஐபியின் உத்தரவுப்படி ஐபி உளவாளி முல்லா தயாராக்குவார்.

முன்னரே தீர்மானித்தபடி சம்பவ இடத்திற்கு முல்லா மூலம் ஐபி வழங்கிய ஆயுதங்களுடன் வரும் இளைஞர்களை, ஐபி உளவாளி முல்லா ஏற்கனவே கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு மறைவாகக் காத்திருக்கும் காவல்துறை, ஐபியின் திட்டப்படி உருவாக்கப் பட்ட இளைஞர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்யும்; அல்லது தாக்குதலில் தீர்த்துக் கட்டும். இதற்குப் பின்னணியில் செயல்பட்ட முல்லாவைக் குறித்து, அதன் பின்னர் எவ்வித விவரங்களும் வெளியாவதில்லை" என இர்ஷாத் அலி தனது கடிதத்தில் கூறுகிறார்.

'ஆபரேஷன் முல்லா' மூலம் கைது செய்யப்படும் இளைஞர்களை மறைமுகமாக வைக்க, டெல்லி காவல்துறைக்கு விசாலமான 'ஃபாம் ஹவுஸ்கள்' உண்டு. மனித உரிமை கமிஷன்கள் எதுவும் அந்தப் பக்கம் தலை காட்ட முடியாது. பொய் என்கவுண்டர்களில் கொல்லப் படுபவர்களின் உடல்களைப் பாதுகாப்பதும் அங்குத்தான். மாதக்கணக்கில் சில 'கைதிகள்' அங்குக் காக்க வைக்கப் பட்டு, தேவைப்படும் வேளைகளில் கொலை செய்யப் படுவர். பின்னர் மீண்டும் ஒரு என்கவுண்டர் நாடகம் மூலம் அவர்களது உடல்கள் மீண்டும் அவ்விடத்திற்கே கொண்டு வரப்படும். இவ்வாறு கொல்லப் படுபவர்களின் உடல்களைப் பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கக் காவல்துறையோ ஊடகங்களோ முயல மாட்டார்கள். அவர்களின் தாய், தந்தையரோ, தங்களுக்கே தெரியாமல் திடீர்த் 'தீவிரவாதி' ஆகிபோன மகனின் உடலைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வர மாட்டார்கள்.

'முஸ்லிம் தீவிரவாத'த்தைக் குறித்தத் தங்களின் பிரச்சாரம் சரிதான் என்பதை நிறுவுவதற்குக் காவல்துறை செய்து கொண்டிருக்கும் சதிகளில் தங்களுக்கும் பங்குண்டு என்பதால் இவ்விவரங்களை வெளி உலகத்திற்குத் தெரிவிப்பது தங்களின் கடமை என்பதை உணர்ந்ததுதான் இக்கடிதம் எழுதுவதற்கான காரணம் எனப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இர்ஷாத் அலி குறிப்பிட்டுள்ளார்.

"நமது நாட்டின் பாதுகாப்பு ஏஜன்ஸிகள் நாட்டைப் பதுகாப்பதற்கு மாறாக, மக்களின் மனங்களில் கலவரத்தையும் அச்சத்தையும் விதைத்து, குழப்பத்தையே உருவாக்குகின்றன. தீயைக் கொண்டு தீயை அணைக்க இயலாது. தீயை அணைப்பதற்குத் தேவை தண்ணீர்தான். ஆனால், நமது பாதுகாப்பு ஏஜன்ஸிகள், பெட்ரோல் ஊற்றித் தீயை அணைக்க முயல்கின்றன" - எனக் குறிப்பிட்டிருப்பதோடு, தங்களின் விஷயத்தில் தலையிட்டு, நியாயமான விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும் எனப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இர்ஷாத் அலி கோரிக்கை வைத்துள்ளார்.

***

புலி வாலைப் பிடித்த கதையாக, உருவாக்கப் படும் உளவாளிகளால் ஒரு காலகட்டத்துக்குமேல் அதிகப் பயனேதுமில்லை என்று அறிய வரும்பொழுதோ தாங்கள் செய்யும் சட்டவிரோதத் செயல்கள் உளவாளி இன்ஃபார்மர்கள் வழியாக வெளியாக வாய்ப்புள்ளது எனத் தெரிய வரும்போதோ உளவாளிகள் காவல்துறையினால் 'தீவிரவாதிகளாக' மாற்றப்பட்டு என்கவுண்டர் மூலம் கொல்லப்படுவர்; அல்லது சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப் படுவர் என்பதற்கு அண்மையில் கஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த நான்கு இளைஞர்களும் பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடையவராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஃப்சல் குருவும் திகார் சிறையிலிருந்து பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள இர்ஷாத் அலியும் அவரது கூட்டாளியும் மிகச் சிறந்த உதாரணங்களாவர்.

தென்காசி, நான்டட், கான்பூர், மாலேகோன், கண்ணூர் என "தேசப்பற்றாளர்கள் முகமூடி" அணிந்து உல்லாசமாக உலாவந்த இந்துத் தீவிரவாதிகளின் பொய் முகங்களும் இந்துத் தீவிரவாதமும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில்.....

நாட்டில் தீவிரவாதமாம்; காரணம் முஸ்லிம் தீவிரவாதிகளாம்!

அசத்துகிறது ஐபி!

சத்யமார்க்கம் . காம்