அதிர்ச்சி தகவல்: ஏழைகளிடம் இருந்து பெறப்படும் லஞ்சம் மட்டும் ரூ.900 கோடி
வறுமைக் கோட்டிக்கு கீழ் வாழும் ஏழை - எளிய மக்களிடமிருந்து மட்டும் ஆண்டுக்கு ரூ. 900 கோடி லஞ்சம் பெறப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
டிரான்ஸ்பிரென்ஸி இண்டர்நேஷனல் இந்தியாவும், ஆராய்ச்சி அமைப்பு ஒன்றும் இணைந்து நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
இந்தப் பணம் அனைத்தும் அடிப்படைத் தேவைகளை பெறுவதற்காக லஞ்சமாக கொடுக்கப்பட்டவை ஆகும்.
இவ்வாறு லஞ்சமாகப் பெறப்பட்ட தொகையில் பெருமளவு போலீஸ் துறைக்கே சென்றுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அதனைத் தொடர்ந்து, நில ஆவணங்கள் பதிவு செய்தலில் அதிகக் தொகை ஏழை - எளியோரிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது விநியோக முறை, மருத்துவம், கல்வி, மின்சாரம், குடிநீர் விநியோகம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம், வங்கி போன்றவற்றில் அதிக முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் பல்வேறு காரணங்களுக்காக காவல்நிலையத்தை அணுகியதாகவும், அதில் தங்களது புகாரினை ஏற்கச் செய்வதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் சுமார் ரூ. 215 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நில ஆவணத்தைப் பதிவு செய்வதற்காக, 3 லட்சத்து 50 ஆயிரம் ஏழை - எளிய மக்கள் லஞ்சம் கொடுத்துள்ளனர்.
இவை தவிர, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை மக்களின் நிலையோ அதைவிடக் கொடுமையாக உள்ளது.
புறநோயாளிகளுக்கான அட்டை பெறுவது, பரிசோதனை மேற்கொள்ளுதல், படுக்கை வசதியைப் பெறுதல் போன்ற ஒவ்வொன்றிற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதால், சுகாதார வசதி வேண்டி வரும் அப்பாவி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாவது கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவத் துறை மட்டுமின்றி, கல்வித்துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகப் புகார் கூறப்பட்டுள்ளது.
தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்பும் அடிதட்டு மக்கள், குழந்தைகளுக்கு தேவையான சான்றுகளை பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த பின்னரே அதனைப் பெற முடிவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்த ஆய்வை மேற்கொண்ட திட்ட இயக்குநர் டாக்டர் சுப்ரதோ மோன்டல், “மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தகவல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டம், மின்னனு நிர்வாகம் உள்ளிட்ட வசதிகள் மூலம் ஏழை-எளியோருக்கு விரைவாகக் கிடைப்பதை உறுதி செய்வதால் மட்டுமே இவ்வாறான பிரச்னைகளைக் களைய முடியும். இதற்கு வெளிப்படைத்தன்மையான நிர்வாகம் அவசியம்’ என்றார்.
தகவல்: ஹிதாயத்