தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பிலுள்ள வக்ஃப்போர்டு சொத்துகள் மீட்கப்படும்: வாரியத் தலைவர் ஹைதர்அலி
தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் போர்டு சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் ஹைதர் அலி தெரிவித்தார்.
விழுப்புரத்தில் வண்டிமேடு, மாம்பழபட்டு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ள வக்ஃப் போர்டு சொத்துகளை அவர் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:
விழுப்புரத்தில் வக்ஃப் போர்டு சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதுபோல் தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. வக்ஃப் போர்டுக்கு சொந்தமான சொத்துகளை யாரும் ஆக்கிரமிப்பு செய்யவோ, விற்கவோ முடியாது. இதை 1995-ம் ஆண்டு சட்டத்தின்படி ரத்து செய்யலாம்.
தமிழகத்தில் சுமார் ரூ. 1000 கோடி மதிப்பில் வக்ஃப் போர்டுக்கு சொத்துகள் உள்ளன. ரூ. 5,400 கோடி மதிப்பிலான சொத்துகள் மறைமுக ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
வக்ஃப் போர்டு என்று இருப்பதை மாற்றி வக்ஃப் என்று மட்டும் பெயர் வைக்க சட்டம் இயற்ற வேண்டும். தமிழக அரசு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்துள்ளது. இது அவர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு உதவும்.
இந்தியாவில் வட்டியில்லா வங்கிகளை அறிமுகப்படுத்த வேண்டும். ஒரு வங்கியொன்று ஏற்கெனவே இதுபோல் கடன் வழங்க முன்வந்தது. ஆனால் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி அளிப்பதற்கு அமெரிக்காவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறார் என்றார் ஹைதர் அலி.
பேட்டியின் போது வக்ஃப் போர்டு கண்காணிப்பாளர் அப்துல்சமது, ஆய்வாளர் ஷஃபிபாபு, ஜமாத் கூட்டமைப்பு தலைவர் அப்பாஸ், பொருளர் ஷாகுல் அமீது ஆகியோர் உடனிருந்தனர்.
This post was submitted by முதுவை ஹிதாயத்