சிறுபான்மை மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர்: "அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்'


இதுபற்றி மாவட்ட கலெக்டர் சுடலைகண்ணன் கூறியுள்ளதாவது: சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி(எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்பட) பயில்பவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கபடுகிறது. இதற்கான தகுதிகள்: ப்ளஸ் 2 படிப்பில், கடந்த (2007-2008) ஆண்டின் இறுதி தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


* அதேபோல, சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பட்ட மேற்படிப்புக்கான கல்வி உதவி தொகை வழங்கபடுகிறது. இதன்படி, ப்ளஸ் 1 முதல், ஆராய்ச்சி கல்வி வரை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்படும். பள்ளி தகுதிகள்: அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கபட்ட கல்வி நிறுவனங்கள் கல்லூரிகளில் கடந்த (2007-2008) ஆண்டின் பள்ளி இறுதி தேர்வில் 50சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


வழங்கப்படும் கல்வி உதவி தொகை பற்றிய விபரம்: ப்ளஸ் 1 முதல் ப்ளஸ் 2 வரை உள்ள வகுப்புகளுக்கு சேர்க்கை மற்றும் படிப்பு கட்டணம் உள்பட ரூபாய் ஏழு ஆயிரம், பராமரிப்புக் கட்டணமாக விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு ரூபாய் இரண்டாயிரத்து 350, விடுதி வசதியின்றி பயில்பவர்களுக்கு ரூபாய் ஆயிரத்து 400 வழங்கபடும். ஐ.டி.ஐ., மற்றும் ஐ.டி.சி., நிறுவனங்களில் தொழில்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை மற்றும் படிப்பு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரம், விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு பராமரிப்பு கட்டணமாக ரூபாய் இரண்டாயிரத்து 350, விடுதி வசதியின்றி பயில்பவர்களுக்கு ரூபாய் ஆயிரத்து 400 வழங்கப்படும். இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கு சேர்க்கை கட்டணமாக ரூபாய் மூன்றாயிரத்து 500, விடுதியில் தங்கி பயில ரூபாய் மூன்றாயிரத்து 350, விடுதியின்றி பயில்பவர்களுக்கு ரூபாய் மூன்றாயிரத்து 300 வழங்கப்படும். ஆராய்ச்சி படிப்பு பயிலும், மாணவ, மாணவிகளுக்கு பராமரிப்புக் கட்டணமாக விடுதியில் தங்கி பயில ரூபாய் ஐந்தாயிரத்து 100, விடுதியின்றி பயில்பவர்களுக்கு ரூபாய் மூன்றாயிரத்து 300 வழங்கப்படும்.

- தினமலர் செய்திகள்