பிழைப்புத் தேடி குவைத்திற்குச் சென்ற தமிழர்கள் ஒன்பது பேர் முதலாளியின் சித்திரவதைகளைப் பொறுக்க முடியாமல் அவரிடமிருந்து எப்படியோ ரகசியமாகத் தப்பியிருக்கிறார்கள். கடந்த ஒரு வார காலமாய் சோறு தண்ணியின்றி நடு ரோட்டில் அலையும் அவர்களை இந்தியத் தூதரகமும் அலட்சியப்படுத்தி விடவே, நாடு திரும்ப வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட த.மு.மு.க.வினர் அவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியில் இறங்கியிருப்பது ஆறுதலான விஷயம்.
கடலூர்மாவட்டம் சாத்தப்பாடியைச்சேர்ந்த ரவிச்சந்திரன்,உதயகுமார், முருகன்,கருணாகரன், அப்துல்கனி மற்றும் திருவாரூர் மாவட்டம் மாங்குடியைச் சேர்ந்த மணிவண்ண பாண்டியன்,ராஜாராமன், முருகானந்தம்,இளையராஜா ஆகியோர்தான் குவைத்தில் தவித்துக்கொண்டிருக்கும் அந்த அப்பாவி ஜீவன்கள்.
நெல்லைப் பக்கம் தாழையூத்தைச் சேர்ந்தவர் பீர் மரைக்காயர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகச் செயலாளராய் இருந்து பலவிதமான பொதுநலப் போராட்டங்களில் ஈடுபட்டவர். இவர் பிழைப்பிற்காக குவைத் சென்றார். அங்கு பஸ் டிரைவராய் இருக்கிறார். அவர் கடந்த 6-ம் தேதி நமது அலுவலகத்திற்கு போன் செய்து... `சார்... பிழைப்புத் தேடி குவைத்திற்கு வந்த ஒன்பது தமிழர்களை அவர்களின் முதலாளி தொடர்ந்து சித்திரவதை செய்ததால் ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் அங்கிருந்து தப்பி வந்து ஒரு வார காலமாய் பசி பட்டினியால் தவித்தனர். அவர்களை நான்தான் மீட்டு என்னுடன் தங்க வைத்திருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் என் அறையிலிருந்தால் எனக்குப் பிரச்னையாகி விடும். எனவே, அவர்கள் தாய் நாட்டிற்குத் திரும்ப உதவி செய்யுங்கள்' என்றவர், ஒன்பது பேரும் சேர்ந்து எழுதிய கடிதத்தையும் நமக்கு இ-மெயில் செய்தார். அந்தக் கடிதத்தில் ஒன்பது பேரும் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விலா வாரியாய் எழுதியிருந்தார்கள்.
சற்று நேரத்தில் குவைத்திலிருந்தே மணிவண்ண பாண்டியன் என்பவர் நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார். ``சார் நானும் எனது நண்பர்கள் ராஜாராமன், முருகானந்தம், இளையராஜா ஆகியோரும் வேலை தேடிக்கிட்டிருந்தோம். அப்ப எங்க ஊரைச் சேர்ந்த புரோக்கர் முருகன் என்பவர்தான் `குவைத்தில் டிரைவர் வேலை இருக்கு, மாசம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம், தங்குமிடம், சாப்பாடு இலவசம்'னு ஆசை காட்டினாரு. உடனே நாங்களும் வீட்டிலிருந்த நகைகளையெல்லாம் அடகு வைச்சி, 90 ஆயிரம் ரூபாய் வரை செலவு செஞ்சி கடந்த 2005-ம் ஆண்டு குவைத்திற்கு வந்தோம். இங்குள்ள அல்ஹசீரா கார் ரென்டிங் எஸ்டேட் என்கிற கம்பெனியில் டிரைவர் வேலை கிடைச்சது. இந்த கம்பெனியில் இருபதுக்கும் மேற்பட்ட பஸ்கள் இருக்கு. அவங்களுக்குச் சொந்தமான பல கம்பெனிகளின் ஊழியர்களை அழைத்துக் கொண்டு அந்தந்த கம்பெனியில் கொண்டு போய் விடுவதே எங்கள் வேலை.
மாசம் பதினஞ்சாயிரம் சம்பளம்னு சொன்னதாலே உற்சாகமாய் வேலை செஞ்சோம். எல்லாம் கொஞ்ச நாள்தான். முதல் மாசம் சம்பளம் தரலே. இரண்டாம் மாசமும் தரலே. கேட்டா லைசன்ஸ், அடையாள அட்டை எடுக்க சம்பளம் சரியாப் போச்சுன்னுட்டாங்க. எங்களுக்கெல்லாம் பயங்கர அதிர்ச்சி. ஆனா ஒண்ணும் பேச முடியாது. தலைவிதியை நொந்தபடி வேலை செஞ்சோம். அப்புறமும் இரண்டு மாச சம்பளம் தரலே. அதைக் கேட்டா அது டெபாசிட்டிலே இருக்கும்னுட்டாங்க. எங்களுக்கு ஒண்ணும் புரியலே. ஆனா நாட்கள் செல்லச் செல்லத்தான் புரிஞ்சிது. அதாவது, நாங்க ஓட்டுற பஸ் 1980-ம் ஆண்டு மாடல். ரொம்பப் பழசு. சரியா பிரேக் கூட பிடிக்காது.ஏதாவது சின்ன சுவரில் மோதித்தான் வண்டியை நிறுத்தணும்.அப்படி மோதும்போது வண்டியில் ஏதாவது சேதம் ஏற்பட்டாலோ, பஞ்சரானாலோ டெபாசிட் பணத்துலே கழிச்சிருவாங்க.
எங்களுக்கு 21 மணி நேர வேலை, மூன்று மணி நேரம்தான் தூக்கம். காலையிலே 4 மணியிலே இருந்து மாலை 6 மணி வரை டிரைவர் வேலை பார்க்கணும். ஆறு மணிக்கு மேலே முதலாளி பாலைவனத்துலே கட்டுற கெஸ்ட் ஹவுசில் சித்தாள் வேலை செய்யணும். இரவு 12 மணிக்கு சித்தாள் வேலையை முடிச்சிட்டு ரூமுக்கு வர நள்ளிரவு ஒரு மணி ஆயிடும். அப்புறம் கொஞ்ச நேரம் தூங்கிட்டு மறுபடியும் அதிகாலை நாலு மணிக்கு எழுந்து வேலைக்குப் போகணும். அதனாலே படுத்தா தூக்கம் வராது. தூக்கமில்லாததாலே உடம்பே மெலிஞ்சி போயிட்டுது. எங்களிடம் முதலில் மாசம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றார்கள். ஆனால் வேலைக்குச் சேர்ந்த பிறகு, 8500 ரூபாய்தான் சம்பளம். அதிலும் சாப்பாடு மற்றும் தங்குமிடத்திற்காக நாலாயிரம் ரூபாய் பிடிச்சுக்குவாங்க. கேள்வி கேட்க முடியாது.பேசாம நம்மூரிலேயே நிம்மதியா இருந்திருக்கலாம் போலிருக்கு'' என்றவரின் குரல் கம்மியது.
அவரைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் என்பவர் நம்மிடம் பேசினார். ``எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி. நானும் எனது நண்பர்கள் உதயகுமார், முருகன், கருணாகரன், அப்துல் கனி ஆகியோரும் புரோக்கர் ஆறுமுகம் என்பவர் மூலம் குவைத் வந்தோம். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவைதான் சம்பளம் குடுப்பாங்க. சில சமயம் அதுவும் லேட்டாகும். ஏன்னு கேட்டாப் போதும், எங்க முதலாளிக்குக் கோபம் வந்திடும். கம்பியால் அடிஅடியென அடிப்பான். பூட்ஸ் காலால் மிதிப்பான். பஸ் ரிப்பேராகி நின்னு போனாப் போதும், உடனே கூப்பிட்டு கம்பியால் அடிப்பான். கக்கூஸ் கழுவச் சொல்லுவான். எங்களாலே எதிர்த்து எதுவும் செய்யமுடியாது.அடிச்சதில் உடம்பு பூரா காயமிருந்தாலும் லீவு தரமாட்டான்.வலியைப் பொறுத்துக்கிட்டு வண்டி ஓட்டியே ஆகணும். இதனாலே சில சமயம் தற்கொலை செஞ்சுக்கலாம்னு தோணும். ஆனா வீட்டை நினைச்சிப் பார்த்து எல்லாத்தையும் மறந்துடுவோம். அந்தக் கொடூரத்துக்கு இன்னொரு உதாரணமும் சொல்றேன். போன வருஷம் என்னோட அப்பா ராமலிங்கம் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இறுதிக் காரியம் செய்யிறதுக்காக ஊருக்கு வர 15 நாட்கள் லீவு கேட்டேன்.`நீ போனவுடனே உங்கப்பா என்ன உயிரோடவா வந்திடப்போறாரு?'ன்னு ஏளனம் செஞ்சி லீவு தர மறுத்துட்டான். என்னோட தங்கை அமுதவல்லியின். திருமணத்துக்குக் கூட என்னால் வர முடியலே!'' என்றார் விரக்தியுடன்.
தொடர்ந்து விழுந்த அடி, உதையின் காரணமாக இந்த ஒன்பது பேரும் கூடிப்பேசி இந்த கம்பெனியை விட்டு எஸ்கேப்பாக முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி கடந்த வாரம் பஸ்சை ஆங்காங்கே நிறுத்தி விட்டு ஓரிடத்தில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்திருக்கிறார்கள். அதன் பின்னர் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் போய் புகார் செய்து தங்களை தாய் நாட்டுக்கே திரும்ப அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கோ, மனுவை மட்டும் வாங்கிக்கொண்டு விரட்டிவிட்டார்களாம். சரியான ரெஸ்பான்ஸ் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமலும் கையில் காசில்லாததால் பசி மயக்கத்திலும் கால் போன போக்கில் சுற்றியிருக்கிறார்கள்.
ஒரு வார கால பட்டினிப் போராட்டத்திற்குப் பின்னர், ஒருவழியாய் குவைத்தில் டிரைவராய் இருக்கும் பீர் மரைக்காயரைச் சந்தித்திருக்கிறார்கள். அதைப்பற்றி நம்மிடம் போனிலேயே விளக்கினார் பீர் மரைக்காயர். ``நான் குவைத் முழுக்க வண்டி ஓட்டுபவன். பஸ்சிலே தமிழர்களும் ஏறுவாங்க. ஒருநாள் என்னோட சக டிரைவர் நண்பர் இந்த ஒன்பது பேர் படும் பாட்டைச் சொல்லி, `நீங்கள்லாம் ஊருலே பெரிய பொதுநலவாதினு பீத்திக்குறீங்க. இங்கே தமிழர்கள் ஒன்பது பேர் சித்திரவதையால் பாதிக்கப்பட்டு சாப்பாட்டுக்கே அல்லல்பட்டுக்கிட்டிருக்காங்க. நீங்க முஸ்லிம். இந்துக்களுக்கெல்லாம் எங்கே உதவப்போறீங்க?'ன்னார்.
உடனே நான் `இந்து - முஸ்லிம்னு பிரிச்சுப் பார்க்காதீங்க. நாம எல்லோருமே இந்தியர்கள்தான்'னு சொல்லி அந்த ஒன்பது பேரையும் எனது ரூமுக்கே அழைத்து வரச்சொன்னேன். இப்ப அவங்களை என்னோட ரூமில்தான் தங்க வைச்சிருக்கேன். ஆனா, அவங்களை ஒரு வாரத்துக்கு மேல் என்னுடன் தங்க வைக்க குவைத் சட்டம் இடம் தராது. என்னையும் சேர்த்து குற்றவாளியாக்கிருவாங்க. இந்தியத் தூதரகத்துலே இவங்க புகார் குடுத்ததாலே,அதிகாரிங்க அந்த பஸ் கம்பெனி முதலாளியை விசாரிப்பாங்க. அவனோ, அந்த ஒன்பது பேரும் பஸ்சை திருடிட்டு வந்துட்டாங்கன்னு பொய்யா புகார் குடுத்துட்டான்னா, அவ்வளவுதான். கேஸ் முடியிறவரை ஒண்ணுமே செய்ய முடியாது. எனவே, தமிழக அரசு மூலம் கோரிக்கை வந்தாத்தான் இவங்க பத்திரமா திரும்ப முடியும்'' என்றார்.
தற்போது இந்த இளைஞர்களை பத்திரமாய் மீட்கும் பணியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏற்றிருக்கிறது. அதன் நெல்லை மாநகரச் செயலாளர் உஸ்மான்கானிடம் பேசினோம்.குவைத்தில் தவிக்கும் இளைஞர்களின் மனு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதைக் கொண்டு கடலூர்,திருவாரூர் மாவட்ட கலெக்டர்களைச் சந்திக்க முடிவு செய்திருக்கிறோம். அந்த இளைஞர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவலம் பற்றி இதுவரை தங்கள் வீடுகளுக்குச் சொல்லவில்லை. சொன்னால் அவர்கள் ரொம்ப வருத்தப்படுவார்களே என்கிற பயம்தான் காரணம். ஆனால், இளைஞர்களின் ரத்த சம்பந்த உறவினர்கள்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடம் புகார் செய்யணும். அதுபற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு மாலைராஜா எம்.எல்.ஏ. வரச்சொல்லியிருக்கிறார். தவிர, வைகோவிடமும் சொல்லப்போகிறோம். கண்டிப்பாக அந்த இளைஞர்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கு த.மு.மு.க. துணை நிற்கும்!'' என்றார் உறுதியுடன்.
ஆக,இந்து இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை பத்திரமாய் நாடு திரும்ப முயற்சிகளை எடுக்கும் முஸ்லிம் அமைப்பின் மனித நேயம் பாராட்டத்தக்கது. நமது தேசத்தின் ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு!