வீட்டில் தனியே இருந்த பெண்ணை ஏமாற்றி ரூ.10 லட்சம் கொள்ளை

சென்னை: டாடா ஸ்கை நிறுவனத்திலிருந்து வருவதாகக் கூறிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து பெண்ணை ஏமாற்றி ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை ஒருவன் கொள்ளையடித்துள்ளான்.சென்னை சூளைமேடு கில்நகர் 3வது குறுக்கு தெருவில் வசிப்பவர் பி.எஸ்.ராவ். இவர் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லட்சுமி (50). மகன் சீனிவாசன் குடும்பத்தினருடன் இந்தத் தம்பதி வசித்து வருகின்றனர்.இந் நிலையில் நேற்று காலை 9.45 மணியளவில் லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார்.நான் டாடா ஸ்கை டி.வி. நிறுவனத்தில் இருந்து வருகிறேன். உங்கள் வீட்டில் நாங்கள் கொடுத்த டிஷ் ஆன்டெனாவில் பிரச்சனை உள்ளதாக உங்கள் மகன் சீனிவாசன் புகார் கொடுத்துள்ளார். அதை சரி செய்ய வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.இதையடுத்து அந்த வாலிபரை லட்சுமி வீட்டுக்குள் அனுமதித்தார். வீட்டின் மாடிக்கு சென்ற அந்த வாலிபர் ஆண்டெனாவை சரி செய்வதுபோல நடித்துவிட்டு, நீங்கள் மேலேயே இருங்கள். நான் கீழே போய் டி.வியை சரிபார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கீழே வந்துள்ளார்.கீழ் அறையில் இருந்தபடி ஜன்னல் வழியே லட்சுமிக்கு குரல் கொடுத்தபடியே இருந்தார். இதை நம்பி லட்சுமியும் மாடியிலேயே நின்றார்.இந் நிலையில் திடீரென அந்த வாலிபரிடம் இருந்து எந்த சத்தமும் இல்லாததால் லட்சுமி கீழே இறங்கி பார்த்தார். அப்போது டி.வி. இருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ அலங்கோலமாக கிடந்தது. அதில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், பணம் ஆகியவற்றை அந்த வாலிபர் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிவிட்டார்.தகவல் அறிந்து துணை கமிஷனர் ராமசுப்பிரமணி, உதவி கமிஷனர் முரளி ஆகியோர் போலீஸ் படையுடன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கைரேகைகளும் ேசகரிக்கப்பட்டன.இந்த வீட்டில் டாடா ஸ்கை ஆண்டெனவாலி பிரச்சனை உள்ளதை எப்படியோ அறிந்து கொண்டும், வழக்கமாக காலை 9 மணியிலிருந்து 10 மணி வரை லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார் என்பதை தெரிந்து கொண்டும் அந்த நபர் இந்த துணிகர கொள்ளையை நடத்தியுள்ளார்.இத்தனைக்கு இந்த வீட்டின் மாடியில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அங்கு வேலை பார்க்கும் 2 பெண்களும் அந்த மர்ம வாலிபரை பார்த்துள்ளனர். வீட்டின் முன்புறம் இஸ்திரி போடுபவரும் வாலிபரை பார்த்துள்ளார்.இவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் கம்ப்யூட்டர் உதவியோடு வாலிபரின் படம் வரையப்பட்டுள்ளது. அவனைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.