ஸ்டிரைக்: 45 இந்தியர்களுக்குத் தண்டனை!

துபாய்: ஸ்டிரைக் என்ற பெயரில் வேலை பார்க்காமல் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும் நடந்து கொண்டதாக கூறி 45 இந்தியத் தொழிலாளர்களுக்கு துபாய் நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

தங்களுக்கு அடிமாட்டு அளவுக்கு குறைந்த ஊதியம் தருவதை எதிர்த்தும், ஊதிய உயர்வு கோரியும் துபாயைச் சேர்ந்த பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் வேலைநிறுத்தம் செய்தனர். அந்த போராட்டத்தின்போது சில இடங்களில் தங்கியிருந்த முகாம்களில் தொழிலாளர்கள் பொருட்களை உடைத்து சேதப்படுத்தவும் செய்தனர்.

இதையடுத்து 45 இந்தியத் தொழிலாளர்களை துபாய் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது துபாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சட்டவிரோதமாக ஸ்டிரைக் நடத்தியது, வன்முறை செயல்களில் ஈடுபட்டது, சொத்துக்களை சேதப்படுத்தியது, நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை போராட்டத்திற்குத் தூண்டியது என பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தவறான செயல் தடுப்புக்கான துபாய் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜஸ்ஸம் பக்கீர், 45 பேருக்கும் தலா 6 மாத சிறைத் தண்டனை விதித்தார். தண்டனைக் காலம் முடிந்ததும், 45 பேரும் நாடு கடத்தவும் அவர் உத்தரவிட்டார்.

தீர்ப்பு குறித்து ஜஸ்ஸம் பக்கீர் கூறுகையில், இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு. இத்தகைய தீர்ப்பு இப்போதுதான் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு தொடர்பாக சட்டவிரோதமான செயல்களை நாட நினைக்கும் பிற தொழிலாளர்களுக்கு இது உறுதியான எச்சரிக்கையாக அமையும் என்றார்.