ராஜ்தாக்ரேவை விரைவில் கைது செய்வோம்
-மும்பை போலீசார்
வன்முறையை மற்றும் இனக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசிய மகாராஸ்டிரா நவநிர்மான் சேனா கட்சித்தலைவர் ராஜ்தாக்ரே மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அபு அசிம் அஸ்மி ஆகியோரை இன்னும் ஓரிரு நாளில் மும்பை போலீசார் கைது செய்வார்கள் என இணை கமிஷனர் கே.எல்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்த அவர், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் படி இருவரும் ஜாமீனில் வெளிவர முடியாது என கூறினார்.
இதற்கிடையில், போலீசாரிடம் கைதாவது குறித்து இன்று மாலை தனது கட்சியினருடன் ராஜ்தாக்ரே ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போலீசாரிடம் கைதாவதை தவிர்க்க இடைக்கால ஜாமீன் எதையும் ராஜ்தாக்ரே பெற மாட்டார் என தெரிவித்த மகாராஸ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிதின் சர்தேசாய், நீதிமன்றத்தில் ஆஜரான பின் ஜாமீன் பெறவே ராஜ்தாக்ரே திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
பிற மாநில மக்களின் வருகையால் மராட்டிய மண்ணின் மைந்தர்கள் சிறுபான்மை இனத்தவர்களாக மாறி வருவதாக ராஜ்தாக்ரே தெரிவித்த கருத்து, மாநிலம் முழுவதும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியதால், மும்பை போலீசார் அவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
இதே போல் சிவாஜி பார்க் பகுதியில், கடந்த 3ம் தேதி நடந்த சமாஜ்வாடி கட்சி பேரணியில் மக்களை தூண்டும் வகையில் பேசிய அஸ்மி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.