இந்தியர்கள் ஸ்டிரைக்: பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் விவாதம்

துபாய்: பஹ்ரைனில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

பஹ்ரைனில் 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இவர்களில் முக்கால்வாசிப் பேர் இந்தியர்கள், கடந்த இரு தினங்களாக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

ஊதிய உயர்வு, அடிப்படை வசதிகள் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய பாலகிருஷ்ணன், முக்மது ஷபி ஆகிய இரு இந்தியத் தொழிலார்கள், நேற்று பஹ்ரைன் அரசால் நாடு கடத்தப்பட்டனர். இரு வேறு விமானங்களில் அவர்கள் பஹ்ரைனை விட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்தியத் தொழிலாளர்களின் போராட்டம் பஹ்ரைனில் பெரும் பரபரப்பையும், அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத் தொழிலாளர்களின் போராட்டம், கோரிக்கை குறித்து பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், தற்போது நடந்து வரும் பிரச்சினை, உறுப்பினர்களின் கோரிக்ைககள் குறித்து பஹ்ரைன் அரசு, அந்நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மஜீத் அல் அலாவியைக் கூப்பிட்டு விசாரித்துள்ளது.

இந்தியா மீது காண்டிராக்ட் நிறுவனங்கள் புகார்:

இதற்கிடையே, இந்தியத் தூதரகம் தான் போராட்டத்தை தூண்டி வருவதாக பல்வேறு காண்டிராக்ட் நிறுவனங்கள் கூறியுள்ளன.

2500 பேர் செய்யும் போராட்டம் மற்ற முகாம்களுக்கும் பரவக் கூடும் என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த நிறுவனங்கள் கூறுகையில், பிரச்சினைக்கு சமூக தீர்வு காண முயற்சிக்காமல், ேவலைநிறுத்தப் போராட்டத்தை இந்திய தூதரகம் தூண்டி விட்டு வருகிறது.

இந்தியத் தூதரகம் மீது பஹ்ரைன் வெளியுறவு அமைச்சகம் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் இந்தியத் தூதரகம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது முட்டாள்தனமான குற்றச்சாட்டு என்றும் இந்தியத் தூதரகம் கூறியுள்ளது. இந்திய அரசின் அறிவுரையின் பேரிலேயே இந்தியத் தூதரகம் நடந்து வருவதாகவும், இந்தியத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசு மிகுந்த அக்கறையுடன் உள்ளதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.