சவூதி அரேபியாவில் பெட்ரோல் டாங்கரும், பயணிகள் பஸ்சும் மோதி தீப்பிடித்ததில் 2 இந்தியர்கள் உள்பட 9 பயணிகள் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.சவூதி அரேபியாவில் 20 பாகிஸ்தானியர்கள், 15 இந்தியர்கள், 12 வங்கதேசத்தினர் ஒரு பேருந்தில் உம்ரா புனித யாத்திரை மேற்கொண்டிருந்தனர். பேருந்தை பஹ்ரைனை சேர்ந்த டிரைவர் ஓட்டிச் சென்றார்.ரியாத்- காசிம் நெடுஞ்சாலையில் உள்ள ஜலாஜில் என்ற இடத்தில் பேருந்து போய்க் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓர் ஆயில் டேங்கருடன் பேருந்து நேருக்கு நேராக மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.பஸ்ஸுக்குள் மளமளவென்று தீ பரவியதால் புகை மூட்டத்தில் வெளியேற முடியாமல் எல்லோரும் அலறினர். இந்த பயங்கர விபத்தில் 9 பேர் அதே இடத்தில் உடல் கருகி பலியாயினர்.இதில் இந்தியாவை சேர்ந்த சர்புதின் அகமது, கே.டி.பி.பவாஸ் ஆகியோர் பலியானது தெரிந்தது. இறந்தவர்களின் உடல்கள் மிகவும் மோசமாக கருகி விட்டதால், இந்தியாவுக்கு கொண்டு செல்லாமல் சவூதியிலேயே இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்தது.இறந்தவர்களில் 5 பேரின் உடல் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகி உருக்குலைந்திருப்பதாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி தெரிவித்தார். காயமடைந்தவர்கள் ரியாத் அருகே மஜ்மா என்ற இடத்தில் உள்ள கிங் காலீத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.காயமடைந்தவர்களில் எத்தனைபேர் இந்தியர்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. இதுவரை 2 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 பேர் சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். 18 பேருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. இதில் 4 பேர் அபாய கட்டத்தில் இருப்பதாக சவூதி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.விபத்துக்குள்ளான பஸ் இன்ஸ்யூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.