குவைத்: இந்தியர் பெருக்கத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

துபாய்: குவைத் நாட்டில் பெருகி வரும் இந்தியர் உள்ளிட்ட அன்னிய தொழிலாளர் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திற்கு முக்கிய அரசியல் பிரமுகர் அறிவுரை கூறியுள்ளார்.குவைத் தேசிய தேர்தல் வரும் மே மாதம் 17ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடவுள்ள சாத் அல்-கான்ஃபோர் என்ற முக்கிய அரசியல் பிரமுகர், குவைத்தில் பெருகிவரும் அன்னியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.அவர் கூறுகையில், குவைத் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய 30 லட்சம் ஆகும். இதில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். மொத்தம் 5,32,000 இந்தியர்களும், 2,51,000 வங்கதேசத்தினரும் வசிக்கின்றனர்.குவைத் மக்கள் தொகையில் 64 சதவீதத்தினர் அன்னிய தேசத் தொழிலாளர்கள். இந்தளவுக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவையில்லை. இதில் 12 சதவீதம் பேர்தான் உயர்கல்வித் திறன் உள்ளவர்கள். மற்றவர்கள் கீழ்மட்டத் தொழிலாளர்கள்.கீழ்மட்டத் தொழிலாளர்களால் நாட்டில் வீணாக தொற்றுநோய் ஏற்படும் அபாயம்தான் உண்டாகும். அதேபோல் திருமணமாகாத அன்னிய தொழிலாளர் பெருக்கத்தால் ஒருநாள் நிச்சயம் கேடுவிளையத்தான் போகிறது. எனவே இந்தப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த குவைத் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.குவைத்தின் பொருளாதாரமே பெட்ரோலியத்தையும் வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் தான் முழுக்க முழுக்க சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . - Thats Tamil.com