துபாய்: அபுதாபியில், பள்ளி பேருந்தில் நான்கு மணி நேரம் அடைபட்ட கேரளாவைச் சேர்ந்த நான்கு வயது எல்.கே.ஜி குழந்தை மூச்சித் திணறி இறந்தான்.
கேரளாவைச் சேர்ந்த ஆதிஷ் என்கிற அந்த நான்கு வயது சிறுவன், அபுதாபியில் உள்ள மெர்ரி லேன்ட் கின்டர்கார்டன் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். வியாழக்கிழமை காலை பள்ளிப் பேருந்தில் அவன் ஏறினான். இந்த நிலையில் அன்று பிற்பகல் 12.50 மணிக்கு ஆதிஷின் தந்தைக்கு பள்ளியிலிருந்து போன் வந்தது. உங்கள் மகன் விபத்தில் சிக்கி விட்டான் என்று பள்ளித் தரப்பில் கூறியுள்ளனர்.
ஆதிஷின் தந்தை ஷெபின் ஸ்ரீதர் துபாய், ஜெபல் அலி பகுதியில் வேலை பார்த்து வருகிறார். பள்ளியிலிருந்து வந்த தகவல் குறித்து ஸ்ரீதர் கூறுகையில், போன் வந்ததும், நான் எனது மனைவி, தந்தை மற்றும் நண்பர்கள் ஷேக் கலீபா மருத்துவ நகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு போனது போது எங்களது மகன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்னர்.
எனக்கு அவன் ஒரே மகன். எனது மகன் எப்படி இறந்தான் என்பதை டாக்டர்கள் சொல்லவில்லை. ஆனால் அவன் மூச்சுத் திணறி இறந்துள்ளதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.
பள்ளிக்கு பேருந்தில் சென்ற அவன் பள்ளி வந்ததும் பேருந்திலிருந்து இறங்கவில்லை. காலை 7.35 மணிக்கு அவனை எனது தந்தை பேருந்தில் ஏற்றி அமர வைத்தார். ஆனால் பள்ளியை பேருந்து அடைந்ததும், அவன் இறங்கி விட்டானா, இல்லையா என்பதை ஓட்டுநரோ, நடத்துநரோ கவனிக்கவில்லை.
எனது மகன் உள்ளே இருப்பது தெரியாமலேயே பேருந்தை மூடியுள்ளனர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் அவன் பேருந்துக்குள்ளேயே இருந்துள்ளான். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான் என்றார் ஸ்ரீதர