குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர், மத்திய அரசின் தலையீட்டால், மரண தண்டனையிலிருந்து தப்பி விடுதலையாகவுள்ளார்.நேபாளத்தைச் சேர்ந்தவர் ஜமுனா தாபா. இவர் கடந்த 2005ம் ஆண்டு குவைத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடன் பணியாற்றி வந்த கேரள மாநிலம் எலத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளகத் என்பவரை குவைத் போலீஸார் கைது செய்து அவர் மீது ஷரியத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த விசாரணையில் செளகத் குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இந்த நிலையில், தாபாவின் குடும்பத்தினர் தங்களுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடாக செளகத் கொடுத்தால் அவரை மன்னிப்பதாக அறிவித்தனர். இதையடுத்து மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டது.இதுகுறித்து கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், தாபாவின் குடும்பத்தினர் ரூ. 20 லட்சம் இழப்பீடு கொடுத்தால் செளகத்தை மன்னிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து செளகத் ரூ. 20 லட்சம் பணத்தை கோர்ட்டில் கட்டினால் அவரை விடுதலை செய்வதாக தெரிவித்தது.இதையடுத்து மத்திய அரசு இந்தப் பணத்தை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி மத்திய அரசு ரூ. 10லட்சம் பணத்தைக் கொடுக்கும். தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத இருவர் தலா ரூ. 5 லட்சம் தருவதாக தெரிவித்துள்ளனர்.இந்தப் பணம் ஜமுனா தாபாவின் குடும்பத்தாரிடம் வழங்கப்படும். எனவே விரைவில் செளகத் விடுதலை ஆவார் என்றார் ரவி.