ஷார்ஜாவில் கலவரம் - 600 இந்தியர்கள் கைது

ஷார்ஜாவில் 600க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் திடீரென கல்வீச்சு மற்றும் கலவரத்தில் இறங்கினர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்து 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷார்ஜாவில் உள்ள டைகர் கான்ட்ராக்ட் கம்பெனியின் மூலம் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அனைவரும், சமீபத்தில் ஒரு தங்குமிடத்திற்கு மாற்றப்பட்டனர். அந்தக் கட்டடம் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை.இதனால் தங்களால் அங்கு தங்க முடியாது என்று தொழிலாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை அவர்களது முகாம் அதிகாரி கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அனைத்துத் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.துபாய் - ஷார்ஜா நெடுஞ்சாலையில், அல் நஹ்தா என்ற இடத்தில் திரண்ட அவர்கள் கல்வீச்சில் இறங்கினர். சாலையில் சென்ற வாகனங்கள் மீதும் கற்கள் வீசித் தாக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் 600க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்னர்.மொத்தம் 800 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பலர் தங்களது முகாமுக்குள் இருந்தபடி போராடினர். மற்றவர்கள்தான் சாலைக்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷார்ஜா போலீஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மோதலில் 15 தொழிலாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் ஷார்ஜாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கலவரம் பெரிதாகாமல் தடுக்க துபாய், அபுதாபி யிலிருந்து கலவரத் தடுப்புப் போலீஸார், சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.