துபாய்: ஷார்ஜாவில் வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்கிய இந்தியர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.ஷார்ஜாவில் அல் குபாய்பா பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த குமார் (40) தன் மனைவியுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் ஷார்ஜாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குமாரை அவரது குடும்பத்தினர் கொண்டு சேர்த்தனர்.வீட்டுக்குள் குமார் தூக்கு போட்டுக்கொண்டு தொங்கியதாகவும் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு வந்ததாகவும் மருத்துவமனையில் டாக்டர்களிடம் குமார் மனைவி கூறினார். ஆனால் குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.மேலும் குமாரின் தலையில் ரத்தக்காயம் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இதுபற்றி அல் கார்ப் போலீசாருக்கு புகார் செய்தனர். இதையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் குமாரின் உடலைக் கைப்பற்றினர்.அவரது தலையில் உள்ள காயம் பற்றி குமாரின் மனைவியிடமும், மற்றொரு உறவினரிடமும் போலீசார் விசாரித்தனர். இதற்கு, வீட்டின் உள்ளே மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய குமாரை தரையிறக்கும்போது எதிர்பாராதவிதமாக அவரது உடல் சரிந்து விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக குமாரின் மனைவி விளக்கம் அளித்தார்.ஆனால் இதில் திருப்தியடையாத போலீசார், குமாரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பினர்.குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பிணப் பரிசோதனை முடிவு வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.