இந்திய, கத்தார் வர்த்தக உறவுக்கு வயது 5000 ஆண்டுகள்!


Mesopotamia Ziggural
துபாய்: சிந்து சமவெளி நாகரீக காலத்தில் காணப்பட்டதைப் போன்ற ஒரு கல்லறைத் தோட்டம், கத்தாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய துணைக் கண்டத்திற்கும், மெசபடோமியா, அரேபிய துணைக் கண்டத்திற்கும் இடையே நீண்ட வர்த்தக தொடர்பு இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கத்தாரில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைத் தோட்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சிந்து சமவெளி காலத்தில் இருந்ததைப் போன்ற தோட்டமாக உள்ளது.

இதன் மூலம் இந்தியாவுக்கும், அரேபிய துணைக் கண்டத்திற்கும் இடையே வர்த்தக தொடர்புகள் நீண்ட காலமாக இருந்திருக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர் முகம்மது அலி அல் சுலைதி கூறுகையில், கத்தாரின் வட மேற்கு கடற்கரைப்பகுதியில் இந்த கல்லறைத் தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கல்லறைத் தோட்டம் சிந்து சமவெளி நாகரீக காலத்தில்தான் இருந்தது.

மேலும், இப்பகுதியில் தற்காலிக குடியிருப்புகளும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் அரேபிய துணைக் கண்டத்திற்கு வர்த்தக ரீதியிலான பயணம் மேற்கொண்டிருக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.

சிந்து வெளிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தகம் தொடர்பாக இங்கு வந்திருக்க வேண்டும். போர்சலின் உள்ளிட்டவற்றை இங்கிருந்து வாங்கி தங்களது பகுதிக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

மிகப் பெரிய அளவில் இரு துணைக் கண்டத்திற்கும் இடையே வர்த்தக தொடர்பு இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

இந்த கல்லறைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் ஏராளமான தற்காலிக குடியிருப்புகள் உள்ளன. வர்த்தகர்கள் வந்து தற்காலிகமாக இங்கு தங்கிச் செல்ல இவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதேபோன்ற தற்காலிகக் குடியிருப்புகள் குவைத், அபுதாபியிலும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.