பள்ளிகளில் படமெடுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாம்பு ! நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதை.
மதவாத நஞ்சை மாண வர்கள் மத்தியில் விதைக்கும் கேடு கெட்ட செயல்தானே? "அரசு விழிக்கட்டும்! ஆரிய விரியன்களை அடக்கட்டும்"

செங்கற்பட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் மேனிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்காக செங்கற்பட்டு நகராட்சியின் எதிர்ப்பையும் புறந்தள்ளி 1967-இல் தமிழ்நாடு அரசே 5 ஏக்கர் நிலத்தினை இலவசமாக அளித்துள்ளது. (G.O. M.S. No.1461 Revenue Dept dated 24.8.1967).

ஒரு கல்வி நிறுவனம் என்கிற காரணத்தால் அரசு நிலத்தை இனாமாக வழங்கியுள்ளது.ஆனால் ராமகிருஷ்ணர் பெயரில் பள்ளி நடத்தும் அந்த நிருவாகம். அப்பள்ளியை ஆர்.எஸ்.எஸின் பாசறையாக, பயிற்சிக்கூடமாக மாற்றி இருக்கிறது என்பதுதான் பயங்கரம்.

இருபது நாள்கள் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. வீர வாத்ய அணி வகுப்புடன் (17.5.2008) சீருடை அணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணி வகுப்பும் நடத்தப்படுகின்றது.

இதற்கான துண்டு அறிக்கைகளும் ஆயிரக்கணக்கில் பொது மக்களிடம் விநியோகிக்கவும் பட்டுள்ளன.ஆர்.எஸ்.எஸ் என்பது நான்கு முறை மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.

காந்தியாரைப் படுகொலை செய்த பாசிசக் கூட்டமாகும். இந்தியாவில் நடைபெற்றுள்ள பல்வேறு மதக்கலவரங்களுக்கும் சூத்ரதாரியாக இருந்திருக்கிறது என்பதை அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணையங்கள் அதிகாரப் பூர்வ அறிக்கைகள் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

1925-இல் ஆர்.எஸ்.எஸ். தோற்றுவிக்கப் பட்டது என்றால் 1927-ஆம் ஆண்டிலேயே நாக்பூரில் வகுப்புக் கலவரத்தை நடத்தத் தொடங்கி விட்டனர்.

கபூர் கமிஷன், டி.பி. மதன் கமிஷன், ரகுபார் தயாள் கமிஷன், ஜெகன்மோகன் கமிஷன், நீதிபதி ஜிதேந்திர, நாராயண் கமிஷன், நீதிபதி பி. வேணுகோபால் கமிஷன் என்று கமிஷன்களின் நீண்ட பட்டியல் உண்டு.இத்தனை ஆணையங்களும் (Commission) ஒன்றுபோல பல்வேறு இடங்களிலும் தூண்டி விடப்பட்ட கலவரங்களுக்குக் காரணகர்த்தாவாக ஆர்.எஸ்.எஸ். இருந்திருக்கிறது என்று திட்டவட்டமாக அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளன.

இந்த ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பலுக்கு வெளிநாட்டிலிருந்து ஏராளமான பணம் வந்து குவித்து கொண் டிருக்கிறது.தன்னார்வத் தொண்டு என்ற பெயரில் இந்தியாவைச் சேர்ந்த 30 ஆயிரம் அமைப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன.

இங்கிலாந்தில் பாசிச அமைப்பான இந்த ஆர்.எஸ்.எஸ்., தன்னை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டுள்ளது. குஜராத் பூகம்பத்தை ஒட்டி இந்தச் சங்பரிவார்; கும்பல் திரட்டிய தொகை பல கோடியாகும்.

பூகம்ப நிவாரணத் துக்காகத் திரட்டப்பட்ட பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய் சேர்ந்திடவில்லை. மதவெறி வளர்வதற்குத்தான் பயன்படுத்தப்பட்டது.

தென் கிழக்கு ஆசியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க ஒரு குழு இருக்கிறது. அதன் பெயர் அசாவ் (Asaw) என்பதாகும்.

அந்தக் குழுவினர் இந்தியா வந்து இங்கிலாந்தில் திரட்டப் பட்ட நிதி எந்த வகையில் செலவு செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தது.British Charity Hindu Extremism என்ற தலைப்பில் அந்தக் குழுவினர் 80 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அளித்தனர். ஆர்.எஸ்.எசும் மற்றும் சங்பரிவர்களும் தொண்டு நிறுவனங்கள் அல்ல இந்துத் தீவிரவாத அமைப்புகள், எனவே அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் என்ற பட்டியலிலிருந்து இவை நீக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்திலேயே முழக்கம் கேட்டதுண்டு.

குஜராத் பூகம்பத்துக்கு அளிக்கப்பட்ட நிதி மட்டுமல்ல; 2002-இல் குஜராத்தில் அரசு பயங்கரவாதத்தினால் 2000 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அல்லவா?

ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்த தவிர்த்தனரே - இரண்டு லட்சம் பேர் அகதி முகாம்களில் சரணடைந்தனரே அதற்காக அளிக்கப்பட்ட நிதியையும் ஆர்.எஸ்.எஸ். தவறாகவே பயன்படுத்தியது.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாயிற்று.

வசூலிக்கப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆர்.எஸ்.எஸ்., பள்ளிகளுக்குச் சென்றது.

இந்தப் பின்னணியைத் தெரிந்து கொண்டால் செங் கற்பட்டில் இராமகிருஷ்ண மடம் நடத்தும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். முகாம் ஏன் நடக்கிறது என்பதற்கான காரணம் எளிதாகப் புரிந்துவிடும்.

கல்வி நிறுவனங்கள் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி கூடாது என அரசே சுற்றறிக்கை விட்டதுண்டு.

அதனைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து செங்கற்பட்டில் இராம கிருஷ்ணா பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆர்.எஸ்.எஸ். முகாமாக இயங்குகிறதே - எப்படி?

சிறுபான்மையினர் மீது வெறுப்பைக் கற்றுக் கொடுத்து பிள்ளைகளை வன்முறை வெறியர்களாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்களா?

5 ஏக்கர் நிலத்தை அரசு கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். முகாம் அமைக்கத்தானா?

மானமிகு மாண்புமிகு கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு இத்தகு பள்ளிகளில் நடவடிக்கைகளைக் கண்காணித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்விக் கூடங்கள் காவி மயமாகிவிடும்.

ராமகிருஷ்ணா விவே கானந்தர், வித்யசாலா பெயர் களில் இயங்கும் பள்ளிகள் கண்காணிக்கப்பட வேண்டும். வன்முறை விளைச்சல் கழனியாக உருவெடுத்துவிடும்.

பிள்ளைகளைப் படிக்க அனுப்புகிறோமா - வன் முறையாளர்களாக ஆவதற்கும் பயிற்சி பெற அனுப்பு கிறோமா?

செங்கற்பட்டு ராம கிருஷ்ண பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு அளிக்கப்பட்ட அய்ந்து ஏக்கர் நிலத்தையும் திரும்பப் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் அரசுக்குச் சொந்தமான பூங்காக்கள் போன்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்கிற சுற்றறிக்கை மீண்டும் ஒரு முறை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு பள்ளி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பேரணி குறித்து பச்சையாகத் துண்டு அறிக்கை அச்சிட்டுப் பொது மக்களுக்கும் வழங்கும்?

காவல்துறை இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்குப் பள்ளி நிருவாகம் கொடுத்திருக்கும் தலைப்பு - பண்புப்பயிற்சி முகாமாம்.என்ன அந்தப் பண்பு? இந்துத்துவாதானே?

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தியாவில் வாழவே கூடாது என்கிற வக்கிரப்புத்திதானே!

மதவாத நஞ்சை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் கேடு கெட்ட செயல்தானே?

வடபுலத்திலே ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளில் புகட்டப்படும் நஞ்சு தமிழ்நாட்டிலும் கடை விரிக்கிறது என்பது வெளிப் படையாகவே தெரிகிறது.

"அரசு விழிக்கட்டும்! ஆரிய விரியன்களை அடக்கட்டும்"

(தகவல் உதவி: திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு கோவிந்தசாமி அவர்கள்- -) மின்சாரம். viduthalai.com