துபாய்: ஐக்கிய அரபு எமிரேஸுக்கும், கோவாவுக்கும் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த மார்க்கத்தில் தனது விமான சேவையை நிறுத்தியது இந்தியன் ஏர்லைன்ஸ். இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் மீண்டும் இச்சேவையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவுக்கான பிராந்திய இயக்குநர் அபய் பதக் கூறுகையில், அடுத்த வாரம் முதல் துபாயிலிருந்து கோவாவுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன சேவை தொடங்கும் என்றார்.
கோவாவுக்கும், ஷார்ஜாவுக்கும் இடையே வாரம் இரு நேரடி விமானங்களை கடந்த மார்ச் 30ம் தேதி வரை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வந்தது. அதேபோல கடந்த டிசம்பர் மாதம், ஏர் இந்தியா நிறுவனம் தான் இயக்கி வந்த வாரம் ஒருமுறை குவைத் -துபாய் -கோவா விமான சேவையை நிறுத்தியது என்பது நினைவிருக்கலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 50 ஆயிரம் கோவா மாநிலத்தவர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.