அரிசி பற்றாக்குறையால் தவிக்கும் சவுதி அரேபிய அரசு நிலைமையைச் சமாளிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
அத்தியாவசிய உணவு விலையேற்றத்தைத் தொடர்ந்து இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பாசுமதி அரிசி தவிர்த்த மற்ற அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. பாசுமதி அரிசி ஏற்றுமதி வரியையும் கடுமையாக உயர்த்தியது.
இதனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகளில் கடும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே அதிகமாக அரிசி இறக்குமதி செய்யும் நாடுகளில் 6வது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. ஆண்டுக்கு சராசரி 9,60,000 டன் அரிசியை இறக்குமதி செய்கிறது. இதில் 5,00,000 முதல் 6,00,000 டன் அரிசியை இந்தியாவில் இருந்துமட்டுமே பெறுகிறது. அதன் மொத்த இறக்குமதியில் 70 சதவீதம் இந்தியாவி்ல் இருந்து பெறப்படுகிறது, குறி்பபாக பாசுமதி அரிசி. தாய்லாந்து நாட்டிலிருந்து 10 சதவீத அரிசியை இறக்குமதி செய்கிறது.
இந்தியாவில் சாதா ரக அரிசி மீதான ஏற்றுமதி தடையினால் சவுதியிலும், ஐக்கிய அரபு குடியரசு நாடுகளிலும் தற்போது கடும் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க இந்தியாவின் உதவியை சவுதி அரசு நாடியுள்ளது.
இந்த மாத துவக்கத்தில் சவுதி அரேபியா சென்ற தி்ட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவிடம் இந்திய அரிசி ஏற்றுமதி தொடர்பான பிரச்னைகள் பற்றிதான் அந்நாட்டு அரசு முழுக்க விவாதித்தது.
அரிசி சப்ளை செய்வது மற்றும் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு விலக்கு கோருதல் உள்பட பேச்சு நடத்த இந்திய தரப்புக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அரிசி இறக்குமதி பிரச்னை குறித்து சவுதி தொழில் மற்றும் வர்த்தக சபை நிர்வாகிகள் தொடர்ந்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரக துணை அதிகாரி ராஜிவ் ஷகாரி தெரிவித்தார்.