பஹ்ரைனிலிருந்து பாயும் ரூ. 94 பில்லியன்!

துபாய்: பஹ்ரைனில் வேலை பார்த்து வரும் இந்தியத் தொழிலாளர்கள், தங்களது சம்பாத்தியம் மூலம் ஆண்டுதோறும் ரூ. 94 பில்லியன் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பி வருவதாக பஹ்ரைனைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஹூசைன் அல் மஹதி தெரிவித்துள்ளார்.இந்தத் தொகை, பஹ்ரைனில் பணியாற்றும் பிற வெளிநாட்டினர் தங்களது நாடுகளுக்கு அனுப்பும் தொகையை விட 2 மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.வளைகுடா குளோபல் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரான ஹுசைன் அல் மஹதி இதுகுறித்து அளித்துள்ள ஒரு பேட்டியில், பஹ்ரைன் நீண்ட காலத்திற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியே இருக்கும்.பஹ்ரைனில் உள்ள 7 லட்சம் மக்கள் தொகையில், 2 லட்சம் பேர் இந்தியர்கள்தான். இந்தியத் தொழிலாளர்கள்தான் பஹ்ரைனின் வெளிநாட்டுத் தொழிலாளர்களில் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். எனவேதான், இந்தியர்கள் மூலம் பெருமளவிலான பணம் பஹ்ரைனிலிருந்து செல்கிறது.அடுத்த பத்து ஆண்டுகளில் பஹ்ரைனில் 30 பில்லியன் டாலர் மதிப்புக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான ஆட்கள் உள்ளூரில் இல்லை. எனவே வெளிநாட்டுத் தொழிலாளர்களையே பஹ்ரைன் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.ஆண்டுதோறும் பஹ்ரைனியர்களுக்காக 10 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புள் உருவாக்கப்படுகின்றன என்றாலும் அவற்றில் 80 சதவீத வேலைகள் வெளிநாட்டினருக்குத்தான் செல்கின்றன என்றார் அவர்.