பெர்லின்: உலகிலேயே மிகப் பெரிய ஷாப்பிங் வளாகம் துபாயில் உருவாகி வருகிறது.துபாயின் பிரமாண்டமான பர்ஜ் துபாய்க்குப் பின்புறம் இந்தப் பெரிய ஷாப்பிங் வளாகம் எழுப்பப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் இந்த மகா ஷாப்பிங் மால் திறக்கப்படவுள்ளது.இந்த ஷாப்பிங் வளாகம், 10 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது என்று துபாய் சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ரேனே ஹிங்ஸ்ட் தெரிவித்தார். சமீபத்தில் பெர்லின் நகரில் நடந்த சுற்றுலா கண்காட்சியில் கலந்து கொண்ட ரேனே இத்தகவலைத் தெரிவித்தார்.இந்த மெகா மாலில், 1200 விற்பனை நிலையங்கள் அமையவுள்ளன. ஒரு மீன் கண்காட்சியகமும் இடம் பெறும்.இந்த வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஒட்டுமொத்த பர்ஜ் துபாய் கட்டடமும், உலகின் மிகப் பெரிய கட்டடம் என்ற அந்தஸ்தைப் பெறும்.பர்ஜ் துபாய் கட்டடத்தில் நூற்றுக்கணக்கான அலுவலகங்கள், தனியார் குடியிருப்புகள், ஹோட்டல் ஆகியவை இடம் பெறும். இந்த பிரமாண்ட ஹோட்டலை இத்தாலியைச் சேர்ந்த பேஷன் டிசைனர் ஜார்ஜியோ அர்மானி டிசைன் செய்துள்ளார். 2009ம் ஆண்டு இந்த ஹோட்டல் திறக்கப்படவுள்ளது.கட்டடத்தின் மேல் புறம் மிகப் பெரிய கோபுரமும் அமைக்கப்படுகிறது. இதிலிருந்தபடி துபாயின் அழகை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க முடியும்.தற்போது பர்ஜ் துபாய் கட்டடத்தில் 165 தங்களைக் கட்டும் பணி முடிந்துள்ளது. இன்னும் சில மாடிகள் மட்டும் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளது.துபாய் பர்ஜ் கட்டடத்தின் மொத்த உயரம் 700 மீட்டராக இருக்கும். இதுவரை 600 மீட்டரை கட்டி முடித்துள்ளனர் என்பது குறிப்பபிடத்தக்கது.