ஒளரங்கசீப் கண்காட்சி: ஓவியங்களை காவல்துறை அகற்றியது

ஒளரங்கசீப் கண்காட்சி: ஓவியங்களை காவல்துறை அகற்றியது

சென்னை லலித்கலா அகாதமியில் நடைபெற்று வந்த ஒளரங்கசீப் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களை காவல்துறை வியாழக்கிழமை அகற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரான பிரான்ஸ்வா கோத்தியேவின் (François Gautier) ‘ஃபேக்ட்’ அமைப்பு அவுரங்கசீப் ஆட்சிக் காலத்திய ஆவணங்கள் குறித்த கண்காட்சியை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாதமியில் மார்ச் 3-ம் தேதியிலிருந்து இந்தக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

குஜராத்தில் சோமநாதர் கோவில், ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த மதுரா உள்ளிட்ட பல்வேறு கோவில்களை இடித்து சேதப்படுத்திய நிகழ்வுகளும் இந்துக்கள் மீதான ஜஸியா வரிவசூல் கொடுமைகளை விளக்கும் வகையில் தீட்டப்பட்ட 65 ஓவியங்களும் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் ராஜஸ்தானில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்டவை என ஃபேக்ட் அமைப்பினர் தெரிவித்தனர்.

ஔரங்கசீப் ஆட்சிக்காலத்தில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டது தொடர்பான படங்கள் இடம் பெற்றதால், கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் வியாழக்கிழமை பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலன் உள்ளிட்ட இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் லலித்கலா அகாதமியில் திரண்டனர்.

ஒரு கட்டத்தில் இந்து அமைப்புகளைச் சேர்தவர்களுக்கும், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து பிரான்சுவா கொத்தியே கூறியதாவது:

மாலை 6.30 மணி அளவில் நுங்கம்பாக்கம் காவல்நிலைய உதவி ஆணையர் முரளி தலைமையில் காவல்துறை கண்காட்சி நடந்த இடத்துக்கு வந்தனர்.

காவல்துறையினருடன் பிரான்சுவா கொத்தியே பேச்சு நடத்தினார். அப்போது முரளியும் அவருடன் வந்த காவல்துறையினரும் ஓவியங்களை அப்புறப்படுத்த தொடங்கினார்கள். அப்போது சில ஓவியங்கள் உடைந்தது.

கண்காட்சி ஏற்பாடுகளில் இருந்த சரஸ்வதி (65), டாக்டர் விஜயலட்சுமி (55), மாலதி (40), அனுபமா (25), பி.ஆர். ஹரன் ஆகிய ஐந்து பேரை கைது செய்து ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் வழக்குப் பதிவு செய்யாமல் அவர்களை காவல்துறை விடுவித்து விட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர்களில் ஒருவரான எஸ். ராமனை (72) காவல்துறை கடுமையாக தாக்கினர். இதில் தோள்பட்டையில் அவருக்கு பலத்த அடி விழுந்தது என்றார்.

காவல்துறை அராஜகம்: ‘இரவு 6 மணிக்கு பெண்களை கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. ஆனால் அதனை மீறி நான்கு பெண்களை இரவு 7 மணிக்கு போலீஸ் வேனில் ஏற்றி ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் உட்கார வைத்தனர்.

கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்கள் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் அந்த ஒருசிலருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரலாற்று ஆவணங்களை காவல்துறை உடைத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா.

கைது செய்யவில்லை: ‘முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான ஓவியங்கள் கண்காட்சியில் இருப்பதாக முஸ்லிம்கள் எங்களிடம் புகார் செய்தனர். அதன் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுத்தோம்.

பாதுகாப்பு கருதித்தான் பெண்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றோம். யாரையும் கைது செய்யவில்லை’ என்று தெரிவித்தார் நுங்கம்பாக்கம் காவல்நிலைய உதவி ஆணையர் முரளி.

கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுவதாக இருந்தது. காவல்துறை ஓவியங்கள் அகற்றி விட்டதால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருவதாக பிரான்சுவா கோத்தியே தெரிவித்தார்.

நன்றி: தினமணி