யு.ஏ.இயில் பயங்கர தொடர் விபத்து- 10 பேர் பலி

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரலாற்றிலேயே மோசமான விபத்தாக, அபுதாபி - துபாய் நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 40 பேர் படுகாயமடைந்தனர். 150க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றன் மீது ஒன்று விழுந்து சேதமடைந்தன.

விபத்து நடந்த இடம் போர்க்களம் போல காணப்பட்டது. படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை கலீபா மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

துபாய், அபுதாபியிலிருந்து மீட்புப் படைகள் விரைந்துள்ளன. ஆம்புலன்ஸ்கள், ஹெலிகாப்டர்கள், ரோந்து வாகனங்கள் என அந்தப் பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

பனிமூட்டம் காரணமாக சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல், கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

150க்கும் மேற்பட்ட கார்கள் மோதிக் கிடந்தன. அவற்றை அகற்ற முடியாமல் மீட்புப் படையினர் திணறியதைப் பார்க்க முடிந்தது.

இதுபோன்ற மிக மோசமான சாலை விபத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றதவில்லை என்று கூறப்படுகிறது.