சவூதியில் தமிழர் உள்பட 3 பேருக்கு மரண தண்டனை

துபாய்: தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூதாட்டியைக் கொன்ற குற்றத்திற்காக 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெட்டாவில் ஒரு மூதாட்டியைக் கொலை செய்ததற்காக தமிழகத்தைச் சேர்ந்த நெளஷத், அவரது மனைவி ஹலீமா நிஸ்ஸா காதர் (இலங்கை), இலங்கையைச் சேர்ந்த பண்டாரநாயகே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூன்று பேரும் அந்த மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரைக் கொலை செய்து விட்டு கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதே வழக்கில் இலங்கையைச் சேர்ந்த மேலும் 2 பெண்கள் உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த ஜெட்டா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மூவருக்கும் மரண தண்டனை விதிப்பதாக வாய் மொழித் தீர்ப்பை அறிவித்தது. ஜனவரி 20ம் தேதி இந்தத் தீர்ப்பு எழுத்துப் பூர்வமாக வெளியிடப்பட்டது. நேற்று நீதிபதி பைசல் அல் ஷேக் இந்தத் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.

மற்ற ஐந்து பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை மற்றும் 500 கசையடிகள் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து 7 நாட்களுக்குள் அப்பீல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பைக் கேட்டு நெளஷத் - ஹலீமா தம்பதியினரின் மகன் பெரும் சோகமடைந்தார். உண்மையில் மற்ற ஐந்து பேருக்கும்தான் மரண தண்டனை விதித்திருக்க வேண்டும் என அவர் கூறினார்.

இந்தத் தீர்ப்பை மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கடுமையாக கண்டித்துள்ளது. முறையான விசாரணை இல்லாமல் இதுபோன்ற மரண தண்டனைகள் விதிக்கப்படுவது மனித உரிமைக்கு புறம்பானது என்று அது வர்ணித்துள்ளது.

இதுகுறித்து ஆம்னெஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தங்களது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க உரிய சட்ட உதவிகள் செய்து தரப்படவில்லை. விசாரணையின்போதும் கூட அவர்களின் சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று அது கண்டித்துள்ளது.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை என்பது தலையை துண்டித்து நிறைவேற்றப்படுகிறது. இதற்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் இருந்து வருகின்றன. இந்த கொடூர தண்டனையை ஒழிக்க வேண்டும் என பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.

இருப்பினும் சவூதி அரசு மரண தண்டனையை ஒழிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி நான்கு இலங்கைத் தொழிலாளர்கள் கொள்ளையடித்த குற்றத்திற்கு ஆளாகி தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு ஆளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.