அமெரிக்காவில் ஆழ வேரூண்றும் விஎச்பி!

அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர்களிடையே சங் பரிவார் அமைப்புகள் தீவிர மதவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக Campaign to Stop Funding Hate (சி।எஸ்.எப்.எச்) என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.இதற்காக இந்து மாணவர்கள் கவுன்சில் (Hindu Students Council (HSC)) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சங் பரிவார் அமைப்புகள் பயன்படுத்தி வருவதாக அந்த அமைப்பு கூறுகிறது.சி.எஸ்.எப்.எச் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் இணை ஆசிரியர்களில் ஒருவரான பிஜூ மாத்யூ கூறுகையில், சமீப காலமாக சங்-மாணவர் நெருக்கம் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.பல்வேறு காரணங்களால் சங் பரிவார் அமைப்புகள் மீதான அமெரிக்க வாழ் இந்திய மாணவர்களுக்கு பிடிப்பு அதிகரித்து வருகிறது. மாணவர்கள் தவிர இளைஞர்களும் பெருவாரியான அளவில் சங் பரிவார் பக்கம் திரும்பிக் கொண்டுள்ளனர்.அமெரிக்காவில் நிலவும் இனவெறி, ஒதுக்கப்படும் போக்கு ஆகியவையும் சங் பரிவார் பக்கம் இந்திய மாணவர்கள் திரும்ப முக்கிய காரணமாகும். இதை தங்களுக்கு பாதுகாப்பாக அவர்கள் நினைக்கிறார்கள்.இந்து மாணவர் கவுன்சிலுக்கும், சங் பரிவாருக்கும் தொடர்பு இருப்பது தெரியாமல் பலர் அதில் இணைந்துள்ளனர் என்பதுதான் முக்கியமானது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்து மாணவர் கவுன்சிலின் கிளைகள் வலுவான நிலையில் உள்ளன.விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களான அசோக் சிங்கால், சாது ரிதம்பரா ஆகியோரின் பேச்சுக்களை மாணவர்களிடம் அதிக அளவில் இந்த அமைப்பு கொண்டு செல்கிறது. அந்தப் பேச்சுக்களால் மாணவர்கள் மத்தியில் பிரிவினைவாத எண்ணம் மேலோங்கி வருகிறது.90களில்தான் இந்து மாணவர் கவுன்சில் தொடங்கப்பட்டது. அமெரிக்க விஸ்வ இந்து பரிஷத்தான் இதை தொடங்கியது. இந்து மதத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில்தான் இது ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது.தற்போது தங்களுக்கும் வி.எச்.பிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, 1993 முதல் தனித்து செயல்பட்டு வருவதாக இந்து மாணவர் கவுன்சில் தற்போது கூறினாலும் கூட சங் பரிவார் அமைப்புகளின் பிரதிநிதியாகவே தொடர்ந்து அது செயல்பட்டு வருவதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன என்று கூறியுள்ளார் மாத்யூ.குஜராத் வன்முறைக்குப் பின்னர் 2002ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் சி.எஸ்.எப்.எச். அமைப்பு. அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு மதத்தினர், பல்வேறு தொழிலில் உள்ளவர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். மதவெறிக்கு எதிரான பிரசாரத்தில் இது ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





Thanks : ThatsTamil.com