துபாய்: வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் வீட்டு வேலைக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 400 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரம்) தர வேண்டும் என வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.
அபுதாபியில் நடந்த கருத்தரங்கில் வயலார் ரவி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அயல்நாடுகளுக்கு வீட்டு வேலைகள் உட்பட ஏராளமான வேலைகளுக்கு இந்திய பணியாளர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். அதற்கு ஆட்களை அனுப்ப வேண்டும் எனில் அவர்களுக்கு குறைந்த பட்சம் 400 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,000 சம்பளமாக கொடுக்க வேண்டும்.
ஆட்களை தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஊதியம் குறித்த விவரத்தை தெளிவாக அளித்திருந்தால் மட்டும் அவர்களுக்கு குடியுரிமை அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதிப்பார்கள்.
இந்த புதிய நடைமுறை 2008 ஜனவரி 1ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு மிக தெளிவாக இருக்கிறது. குறைந்த பட்ச ஊதியம் 400 டாலர்களுக்கு கீழ் இருந்தால், அந்த வேலைக்கு யாரும் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் அரசு அனுமதிக்காது.
ஏராளமான நாடுகள் தங்கள் நாட்டில் இந்த ஊதியத்திற்கு பணிபுரிய இந்திய தொழிலாளர்களை தேர்ந்தெடுக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பிற பணிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் திட்டம் அரசிடம் இல்லை.
அதிகளவு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் நாடுகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார் வயலார் ரவி.
Thanks : Thats Tamil News