மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்


சென்னையில் தமிழ் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவைக்கு நன்றி தெரிவித்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதல்வர் கருணாநிதியின் தொடர் வலியுறுத்தலால் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சென்னையில் தமிழ் செம்மொழி ஆய்வு மையம் அமைக்க ரூ.76 கோடியே 32 லட்சம் ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில், 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தின் தலைவராக முதல்வர் கருணாநிதி பொறுப்பு வகிப்பார் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சரவை மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் அர்ஜூன்சிங் ஆகியோருக்கு தமிழக சட்டப்பேரவை உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கொள்கிறது.
இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த தமிழக முதல்வருக்கும் இப்பேரவை தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.