துபாயில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி
தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத்
திமுக மற்றும் அதிமுக பிரமுகர்கள் ஒரே மேடையில் வீற்றிருப்பது தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரிதும் அபூர்வ நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் துபாயில் அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு வளைகுடா தமிழர் பேரவை 28.01.2008 திங்கட்கிழமை நடத்திய பாராட்டு விழாவில் திமுகவைச் சேர்ந்த கும்பகோணம் நகரசபைத் தலைவர் அன்பு மற்றும் அதிமுகவைச் சேர்ந்த திருவாரூர் மாவட்ட அதிமுக தொழிற்சங்க தலைவர் மலர்வேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
துவக்கமாக கபீர் வரவேற்றார். ஸ்கை எக்ஸ்பிரஸ் இயக்குநர் செய்யது அப்துல் காதர் ( சினா தானா ) தனது உரையில் சமூக நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து விவரித்தார். கல்வியின் அவசியம், புரிந்துணர்வு உள்ளிட்டவை குறித்து உரை நிகழ்த்தினார்.
மலர்வேந்தன தனது உரையில் அமீரக மன்னராட்சி மதிக்கத்தக்க வகையில் இருப்பது குறித்து பாராட்டு தெரிவித்தார். நமது நாட்டில் சமதர்மம், உரிமை கொடுத்திருப்பது பல்வேறு விபரீதமுடிவுகளைத் தந்து வருகிறது. இந்தியா குறிப்பாக தமிழகம் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. எதிர்காலத்தில் வெளிநாட்டினரே நமது நாட்டிற்கு வேலை தேடி வரும் சூழல் ஏற்படலாம்.
அன்பு தனது உரையில் தமிழகத்தில் இருதுருவங்களாக இருக்கும் மலர்வேந்தனும், தானும் இங்கு ஒரே மேடையில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். அமீரகத்தில் இருக்கும் இத்தகைய தமிழர் பண்பாடு தமிழகத்திலும் வர வேண்டும் என தான் விரும்புவதாக குறிப்பிட்டார். மனித உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்து மருத்துவசேவையை செய்து வருவதாகக் குறிப்பிட்டார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது வருமானத்தை முறையாக சேமித்து எதிர்காலத்திற்கு பயனளிக்கும் வண்ணம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர். விழாவில் அஜ்மான் மூர்த்தி, சபீர் அஹ்மது, ஜெயந்தி சுரேஷ், குடந்தை இஸ்லாமுதீன், அண்ணாதுரை உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.
ஆல்பர்ட் நன்றி கூறினார். அன்வர் பாஷா தொகுத்து வழங்கினார்.விழாவில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.