துபாயில், இந்தியத் தொழிலாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

துபாயில், இந்தியத் தொழிலாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


சமீப காலமாக வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு இந்தியத் தொழிலாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்டவரின் பெயர் சந்திரன் பிள்ளை (54). இவர் துபாய், ஜபேல் அலி பகுதியில் உள்ள ரோமியோ டெக்கார் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சனிக்கிழமை தனது முகாமில் உள்ள அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் சந்திரன். மின்விசிறியில் தூக்குப் போட்டு சந்திரன் தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளிக்கிழமை சந்திரனும், அவருடன் தங்கியிருக்கும் மற்றொருவரும் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டுள்ளனர். அவர்களுடன் மேலும் இரு சக தொழிலாளர்களும் இருந்துள்ளனர். அப்போது சந்திரன் நார்மல் ஆகத்தான் இருந்துள்ளார்.

சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு எழுந்த சந்திரன், தனது காலை உணவை முடித்துள்ளார். வழக்கம் போல அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் பேருந்து சந்திரன் உள்ளிட்ட தொழிலாளர்களை அழைத்துச் செல்ல வந்துள்ளது. ஆனால் வேலைக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் சந்திரன்.

பின்னர் மாலையில் மற்ற தொழிலாளர்கள் முகாமுக்குத் திரும்பியபோது, சந்திரன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

ஒரு வருடத்திற்கு முன்புதான் சந்திரன் வேலையில் சேர்ந்துள்ளார். எப்போதும் மகிழ்ச்சிகரமாகவே காணப்படுவாராம்.

இந்த நிலையில் சமீபத்தில் சந்திரனுக்கு அவரது மனைவியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், சந்திரனின் மகள் தனது கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு தாய் வீட்டுக்குத் திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் கவலை அடைந்தார் சந்திரன். இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.