இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி மாலை 4.32 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக ஜகர்த்தாவில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிமோர்சி நகருக்கு அருகே, பாண்டா கடற்பரப்பிற்கு அடியில் 23 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்க உருவானதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையும், அடுத்த ஒரு மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்டதால், அப்பகுதி மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர்.
நிலநடுக்கத்தின் தீவிரம் அதிகமாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இதனை உணரவில்லை என தெரிவித்துள்ளனர். எனினும் சேத விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.